வேலையை விட்டு நிறுத்தியதால் ஆத்திரம் : ஹோட்டல் உரிமையாளர் மீது போதை ஊழியர்கள் சரமாரி தாக்குதல்.. ஷாக் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan16 May 2022, 8:22 pm
கோவை போத்தனூர் அடுத்த நஞ்சுண்டபுரம் ரோடு அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டின் (வயது 30). இவர் பிடெக் படித்து முடித்து விட்டு போத்தனூர் மெயின் ரோட்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்தில் சிவா, சாரதி, நவீன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக போதை பழக்கத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர்கள் சரிவர வேலையை கவனிக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் செபஸ்டின் கடையில் பணிபுரிந்து வந்த சிவா, சாரதி, நவீன் ஆகிய மூவரையும் வேலையைவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுத்தினார்.
இதையடுத்து நேற்று முன்தினம் காலை செபாஸ்டின் கடையில் வேலை பார்த்து வரும் வெற்றி என்பவரை சிவாவும் சாரதியும் நேரில் வந்து அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து வெற்றிக்கு மது மற்றும் போதை பொருட்களை கொடுத்து நுகரச் செய்துள்ளனர்.
சனிக்கிழமை கடையில் வியாபாரத்தை கவனிப்பதற்காக செபஸ்டின் வந்துள்ளார் . அப்போது பணி செய்ய முடியாத நிலையில் வெற்றி அங்கு இருந்துள்ளார். இதையடுத்து செபஸ்டின் வெற்றியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது வெற்றி, சிவாவும் சாரதியும் தன்னை வந்து அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்ததாக கூறி இருக்கிறார். இதையடுத்து செபாஸ்டின் சிவாவை செல்போன் மூலம் அழைத்து எதற்காக வெற்றியை அழைத்துச் சென்று மதுவுக்கு அடிமையாக்கி விடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் போனில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரம் தீராத சிவா, சாரதி, நவீன் மற்றும் அவரது நண்பர் மிதுன் உட்பட சிலருடன் நேற்று முன்தினம் மாலை செபஸ்டின் நடத்திவரும் ஹோட்டலுக்கு முன்பு காரில் வந்துள்ளனர்.
மதுபோதையில் வந்திருந்த அவர்கள் அங்கேயே நின்றுகொண்டு கடைக்கு வந்து செல்லும் பெண்களிடம் கிண்டல் செய்துள்ளனர். இதைப்பார்த்த செபஸ்டின் சிவா மற்றும் சாரதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உடனே ஆத்திரமடைந்த சிவாவும் சாரதியும் தகாத வார்த்தைகள் பேசியதோடு செபாஸ்டினை வம்புக்கு இழுத்து உள்ளனர். இதையடுத்து ஹோட்டலில் இருந்து வெளியே வந்த செபாஸ்டினை அவர்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்க துவங்கினர் .
மேலும் கல்லால் செபாஸ்டின் தலை மற்றும் முகத்தில் தாக்கினர். இதில் செபாஸ்டினுக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு வருவதற்குள் செபாஸ்டின் மீது தாக்குதல் நடத்திய சிவா, சாரதி, மீதுன், நவீன் உட்பட சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர் அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து செபாஸ்டின் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் சிவா, சாரதி , நவீன், மிதுன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஹோட்டல் உரிமையாளர் மீது பணியிலிருந்து நிறுத்தப்பட்ட ஊழியர்கள் வந்து தாக்குதல் நடத்திய சம்பவ சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.