இந்து அறநிலையத்துறை நிலத்தில் ஞானசேகரன் வீடு.. அரசே சமர்ப்பித்த ஆதாரம்!
Author: Hariharasudhan8 January 2025, 5:23 pm
அண்ணா பல்கலை வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரனின் வீடு கோயில் நிலத்தில் உள்ளதாக வருவாய்த்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரிடம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானசேகரன் வீட்டை சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பினர் சோதனை செய்தனர். இதில், இரண்டு அட்டை பெட்டிகளில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், ஞானசேகரனின் வீடு அமைந்திருக்கும் இடம் யாருக்குச் சொந்தமானது என விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஞானசேகரன் வீடு அமைந்துள்ள மண்டபம் சாலை மற்றும் ஏரிக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும், நேற்று முன்தினமும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஞானசேகரன் வீடு மட்டுமல்லாமல், அருகில் உள்ள அனைத்து வீடுகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், அந்த இடம் முழுவதும் திருவான்மியூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் நிலத்திற்குச் சொந்தமானது என தெரிய வந்தது. பின்னர், கிண்டி தாசில்தார் மணிமேகலை தலைமையில், அதிகாரிகள் அந்த இடத்தை அளவிட்டனர்.
இதையும் படிங்க: பிரபல நடிகையிடம் பாலியல் அத்துமீறல்… பதுங்கிய பிரபல தொழிலதிபர் கைது!
இதன் முடிவில், இந்த இடம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். காரணம், 20க்கும் மேற்பட்ட வீடுகள், இந்து சமய அறநிலைத்துறைக்குச் சொந்தமான ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் நிலத்திலும், சில வீடுகள் மாநகராட்சி நிலத்தின் சில நூறு அடிகளை சேர்த்தும் கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, வருவாய்த் துறையினர் அறிக்கை சமர்பித்துள்ளனர். இதில், கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் உள்ள வீடு, கோயில் நிலத்தில் உள்ளதால் அதை ஞானசேகரனின் சொத்தாக கருத முடியாது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டின் ஒரு பகுதி கோயில் நிலத்திலும், நுழைவுவாயில் போன்றவை மாநகராட்சி நிலத்திலும் இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.