அதிமுக பேரையே நான் சொல்லல.. கூட்டணி குறித்து அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

Author: Hariharasudhan
9 March 2025, 10:50 am

கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற பெயரையே நான் எங்கும் கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டணி குறித்து நானும், அதிமுக பொதுச் செயலாளரும் தெளிவாக விளக்கியுள்ளோம். கூட்டணி தொடர்பான பேட்டியின்போது, அதிமுக என்ற பெயரையே நான் எங்கும் கூறவில்லை.

நான் கூறியதையும், அதிமுக பொதுச் செயலாளர் கூறியதையும் திரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாஜகவின் நிலையைப் பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அதிமுகவைப் பற்றி அதன் பொதுச் செயலாளர் தெளிவாக பேசியுள்ளார். நான் டிபேட்டுகளை (தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் கலந்துரையாடல்) பார்ப்பதில்லை.

அரசியல் கலந்துரையாடல்ளில் விமர்சகர்கள் என்ற பெயரில் கலந்துகொண்டு, பாஜகவை திட்டுவதையே சிலர் நோக்கமாக கொண்டுள்ளனர். தற்போது அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாகப் பேசுவதில்லை. அவர்களுக்கு திமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் குறிக்கோள்.

Annamalai about EPS

எது போன்ற கூட்டணி அமைய வேண்டும் என்று அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கின்றனர். இந்த நிலையில், கூட்டணி குறித்து நானும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் எப்படி அதைப் பற்றி தொடர்ந்து பேச முடியும்? பத்திரிகையாளர்களுக்கு கள நிலவரம் தெரியும்.

இதையும் படிங்க: கண்ணே கலைமானே.. அரங்கேறிய இளையராஜா சிம்பொனி.. அதிர்ந்த அரங்கம்!

ஆனால், டிபேட்டுகளில் விமர்சனம் என்ற பெயரில் அமர்பவர்களுக்கு கள நிலவரம் தெரியாது. ஏசி அறையில் அமர்ந்துகொண்டு பத்திரிகையில் எழுதுகின்றனர். இதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன தெரியும்?” எனக் கூறினார்.

முன்னதாக, நோட்டாவுடன் போட்டி எனக் கூறிக் கொண்டிருந்த கட்சிகள் பாஜக உடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறது என அண்ணாமலை கூறியது அரசியல் மேடையில் பரபரப்பான நிலையில், ‘அண்ணாமலை அதிமுகவைக் குறிப்பிடவில்லை’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த நிலையில், அதையே மீண்டும் அண்ணாமலை கூறி தெளிவுபடுத்தியுள்ளார்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?