செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

Author: Hariharasudhan
31 March 2025, 11:38 am

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை விமான நிலையத்தில் வைத்து நேற்று (மார்ச் 30) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் எவ்வளவு மோசமான முதலமைச்சராக இருந்தாலும், 40 சதவீதம் அவருக்கு ஆதரவு கிடைக்கும். ஆனால், சி வோட்டர் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 27 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நான்கில் ஒரு பங்கு மட்டுமே அவரை ஆதரிக்கின்றனர். இது தான் தமிழகத்தின் நிலை. தேசிய ஜனநாயகக் கூட்டணி, தென் தமிழகத்தில் ஒரு மாதிரியாகவும், கொங்கு மண்டலத்தில் ஒரு மாதிரியாகவும் இருக்கும். தமிழகத்தில் உள்ள ஐந்து மண்டலங்களில், மூன்று மண்டலங்களில் வெற்றி பெறாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது.

தென் தமிழகத்தின் சூழல், மதுரை வட்டார தொகுதிகள் மற்றும் கொங்குப் பகுதி தொகுதிகளின் தனித்தன்மை குறித்து டெல்லியில் கட்சித் தலைமையுடன் ஆலோசித்தேன். ஆனால், டெல்லியில் என்னப் பேசினேன் என்பதை வெளியிட்டால் தவறாகிவிடும்.

Annamalai

சாதிகள் வேண்டாம் என நினைக்கிறோம். ஆனால், தேர்தலில் சாதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கட்சியின் தலைவராகவும், தொண்டராகவும் மைக்ரோ அளவில் இவை அனைத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. மேலும், கூட்டணி குறித்து எதுவும் பேச விரும்பவில்லை.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பேசிய உள்துறை அமைச்சரின் கருத்தையே இறுதியாக எடுத்துக்கொள்ளுங்கள். கூட்டணி குறித்து எங்கள் தலைவர்கள் சரியான முடிவெடுப்பார்கள். அவர்களிடம் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். அண்ணாமலை எதையும் மாற்றி பேசுபவன் அல்ல.

எனக்கு பாஜக, தமிழக நலன் மிகவும் முதன்மையானது. தொண்டனாக பணியாற்றத் தயார் என்று டெல்லியில் தெரிவித்துள்ளேன். என்னை எதிர்காலத்தில் பார்ப்பீர்கள். ஐபிஎஸ் ரேங்கில் நான் 2. சொந்தமாக நின்று நிலைத்துப் பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய்ப்பேச்சு, குறும்பு அதிகம். தன்மானம் கொஞ்சம் அதிகம். வைராக்கியமும் அதிகம்.

நான் இங்கு அதிகாரத்துக்காகப் வரவில்லை. பாஜகவின் அனைத்து முடிவுகளும் தொலைநோக்குப் பார்வையுடன் இருக்கும். என்னால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது. நான் மாறி மாறிப் பேசுபவன் கிடையாது. எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாஜக வளர்ச்சி மட்டுமே எனக்கு முக்கியம்.

பிரதமர் மோடி ஏப்ரல் 6ம் தேதி இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வர உள்ளார். அரசு விழாவில் பங்கேற்ற பின்னர், மதுரை வழியாக அவர் திரும்புவார். தேர்தலுக்குப் பின் பிரதமரின் முதல் தமிழகப் பயணம் இதுவாகும். மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது.

திமுகவில் ஸ்டாலின் வேட்பாளர். விஜய் தன் கட்சியில் வேட்பாளர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர். ஆனால், பாஜக யாரையும் முதலமைச்சராக முன்மொழிவதில்லை. இருப்பினும், தமிழகத்தில் எங்கள் கட்சியின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது.

இதையும் படிங்க: ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

அதிமுகவில் இருக்கும் பிரச்னைக்குள் செல்ல நான் விரும்பவில்லை. பாஜக எதற்காக மற்றொரு கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டும். எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளார். அதில் எந்த விதத்திலும் தவறில்லை. செங்கோட்டையன் பயணம் குறித்து யூகங்களே எழுதப்படுகின்றன.

பாஜகவுக்கு யாரையும் திரைமறைவில் சந்தித்துப் பேச வேண்டிய அவசியமில்லை. பாஜக இன்னொரு கட்சியை அழித்து வளருமென்றால், பாஜகவும் அழிந்துவிடும் என்றுதான் சொல்லி வருகிறேன். பாஜக எந்தக் கட்சியையும் அழித்து வளராது” எனத் தெரிவித்துள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!
  • Leave a Reply