‘என் பாதை தெளிவாக தொடங்கியுள்ளது’.. சாட்டையடித்த பின் அண்ணாமலை பேச்சு!
Author: Hariharasudhan27 December 2024, 11:56 am
ஒரு தவமாக இதனை தமிழக மக்களுக்காகச் செய்கிறோம் என சாட்டையடி போராட்டத்தை நடத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோயம்புத்தூர்: திமுக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னைத்தானே 8 முறை இன்று சாட்டையால் அடித்துக் கொண்டார். கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு இந்த நூதனப் போராட்டத்தைக் கையிலெடுத்த அண்ணாமலை, இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாங்கள் எடுத்துக் கொண்டுள்ள போராட்டம் வருங்காலத்தில் மிகவும் தீவிரமாகும். ஒரு தனி மனிதனைச் சார்ந்தோ, ஒரு தனிமனிதன் ஆட்சியாளர்கள் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் போராட்டமோ இது அல்ல. அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கல்வியின் தரம் தற்போது சரியத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் பின்தங்க ஆரம்பித்துள்ளது. ஒரு போராக இருந்தாலும், பெண்ணை துன்புறுத்தக் கூடாது என்பது நம்முடைய மரபு. ஆனால், இன்று தமிழ்நாட்டில் பெண்களின் மீது தொடுக்கப்படும் குற்றச் செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தவவேள்வியாக இன்று இந்த போராட்டத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். 48 நாட்கள் விரதம் இருக்க உள்ளேன். மூன்று ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தை எவ்வளவு பின்னால் கொண்டு போய் இருக்கின்றார்கள் என்பதையும் தொடர்ந்து நாங்கள் பேசுவோம்.
நான் காவல்துறையில் பணியாற்றியபோது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் பணியாற்றினேன். அந்த குற்றவாளியையும் நான் கண்டுபிடித்தேன். அப்போது இறந்த பெண்ணின் தாய் என்னிடம், “குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். என் பெண்ணை திருப்பிக் கொடுங்கள்” எனக் கேட்டார்.
இது பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது. இன்றும் அப்படியான ஒரு சம்பவமே நடக்கிறது. சாதாரண அரசியல்வாதி போன்று, அதை பேசிவிட்டு கடந்து செல்ல இயலவில்லை. அதனால் நன்றாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்தேன். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணிகளை அணியப் போவதில்லை.
இது ஒரு தவமாக தமிழக மக்களுக்காகச் செய்கிறோம். இதனை நகைச்சுவையாக பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கட்டும், சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: தலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
லண்டன் சென்ற பயணத்திற்குப் பிறகு என்னுடைய பாதை தெளிவாகி உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பதற்கான உறுதித்தன்மை அதிகரித்துள்ளது. அங்கே படித்துவிட்டு திரும்பிய பிறகு, அரசியலை தூரமாக நின்று பார்க்கும்போது நிறைய புரிதல் உள்ளதாகவே நினைக்கிறேன்” என்றார்.
முன்னதாக, காலணிகளை அணியாமல் இருப்பது, சாட்டையால் அடித்துக் கொள்வது போன்ற அண்ணாமலையின் போராட்டங்கள் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளதாகவும், அவரின் போராட்டங்கள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக் கூடாது என்றும், லண்டன் சென்று வந்ததில் இருந்து அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.