காவடி எடுங்கள் விஜய்,, ஏசி ரூம் அரசியலா? அண்ணாமலை கடும் விமர்சனம்
Author: Hariharasudhan12 February 2025, 11:19 am
மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னையை அறிந்து கொண்டு தீர்ப்பதே அரசியல் என தவெக தலைவர் விஜயை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்: இது தொடர்பாக பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “யார் ஒருவரை எத்தனை முறைச் சந்தித்தாலும், நாங்கள் மக்களைச் சந்தித்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களை நாங்கள் சந்திக்கிறோம்.
மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னையை அறிந்து கொண்டு தீர்ப்பதே அரசியல். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு, அரசியல் வியூக வகுப்பாளரை அழைத்து, அருகில் உட்கார வைத்து செய்வதல்ல அரசியல். மக்களைக் கேட்கும் போது எதற்காக தேர்தல் வியூக வகுப்பாளர்?
சாதாரணமாக என் மண், என் மக்கள் யாத்திரை போல், விஜய் யாத்திரை செல்ல வேண்டும், மக்களைச் சந்திக்க வேண்டும், காவடி எடுங்கள், தெருவில் நில்லுங்கள். மக்களைக் கேட்காமல் வேறு ஆலோசகர்களை வைத்து தேர்தலைச் சந்தித்தால், அந்த அரசியல்வாதிகளுக்கு மக்கள் பாடம் எடுப்பார்கள்.
சர்வே எடுக்கும் பசங்களுக்கு மக்களின் பசி தெரியுமா? திமுககூட ஒரு நிறுவனம் நடத்துகிறது. இன்னும் எத்தனை பேர்தான் அரசியல் ஆலோசகர்களை வைத்து அரசியல் செய்வார்கள்“ என்று தெரிவித்துள்ளார்.” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, தைப்பூசத்தை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்துச் சென்றார் அண்ணாமலை.
இதையும் படிங்க: பட்டுக்கோட்டை பள்ளி மாணவி உயிரிழப்பு.. பெற்றோர் திடீர் வாதம்!
மேலும், அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனா மூலம் பிகேவைச் சந்தித்ததாகக் கூறும் நிலையில், பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.