திடீரென அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை.. மாலில் போராட்டம்!
Author: Hariharasudhan30 December 2024, 11:14 am
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில், யார் அந்த சார் என்ற பதாகை போராட்டத்துக் கையில் எடுத்துள்ள அதிமுகவிற்கு அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: கடந்த டிசம்பர் 30ஆம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இது தொடர்பாக, பிரியாணி கடை நடத்தி வந்த சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மேலும் தாமாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட குழுவை நியமித்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து, மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதேநேரம், தேசிய மகளிர் ஆணையமும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரு நபர் அடங்கிய குழுவும் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், யார் அந்த சார் என்ற பதாகையை அதிமுகவினர் கையில் ஏந்தி ஆங்காங்கே நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், எக்ஸ்பிரஸ் அவென்யூவில் யார் அந்த சார் என்ற பதாகையை ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள மு.க.ஸ்டாலினின் மாடல் அரசைக் கண்டித்தும், அதிமுக ஐடி விங் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அனுமன் ஜெயந்தி : விஸ்வரூப ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த கோவை ஸ்ரீ அஷ்டாம்ஸவரத ஆஞ்சநேயர்!
மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர்,போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர்,என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.
அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும். இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? யார் அந்த SIR ?” எனக் குறிப்பிட்டுள்ளார் மேலும் இது தொடர்பாக பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது.