‘டிஸாஸ்டர் மாடல்’.. வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகள்!

Author: Hariharasudhan
10 February 2025, 9:02 am

மழை நாட்களில் மட்டும் நாடகமாடுவதை விட்டுவிட்டு, நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்.

தமிழக அரசின் கொள்கை குறிப்பில், கடந்த 2021-22 முதல் 2023-24 வரை தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன் ரூ.5,885.64 கோடி தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் பெரியக்கருப்பன், ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறியுள்ளார்.

பல பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர், கண்துடைப்புக்காக சிறிய அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதனைப் பல கோடி செலவில் விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் ஆட்சியால், இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?

Annamalai condemns MK Stalin

கடந்த 10 ஆண்டுகளாக பருவமழையின்போதும் சென்னை பாதிக்கப்பட்டநிலையில் சென்னையின் உள்ள திமுக எம்எல்ஏக்கள் என்ன செய்திருக்கிறார்கள்? மழை நாட்களில் மட்டும் நாடகமாடுவதை விட்டுவிட்டு, நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா, இத்தனை ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கணக்கு காட்டிவிட்டு ஒவ்வொரு முறையும் மழையின்மீது பழியைப் போட்டு, பேரிடர் நிவாரண நிதி தரவில்லை என்று கூற வெட்கமாக இல்லையா?

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனையே மழை வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட நகைச்சுவை அரங்கேறியது இந்த டிஸாஸ்டர் மாடல் ஆட்சியில் தானே. நீர்நிலைகளை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மழையால் விவசாயிகளுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும்படி நடந்துவிட்டு அதன்பின்னர், நிவாரணம் என்ற பெயரில் நாடகமாடுவது ஏன், தமிழக மக்களால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட திமுக எம்.பி.க்கள் தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் கேட்டிருக்கிறார்களா, ஒதுக்கப்பட்ட நிதியையும், சிலை வைக்கிறோம், பெயர் வைக்கிறோம் என வீணடித்துவிட்டு, மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் பொறுப்பையும் தவறவிட்டு நாடமாகடிக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா?

அமைச்சர் பெரியக்கருப்பன் துறையிலேயே இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும். இதற்கு அமைச்சர்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து, எண் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் (தமிழ்) கடைசி இடத்தில் உள்ளது. கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழகக் குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: வாந்தி தான் வருது…பேட் கேர்ள் படம் ரிலீஸ் ஆகவே கூடாது…பிரபல நடிகை காட்டம்..!

இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே PMSHRI உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை நீங்கள் நிறைவேற்றினீர்களா இல்லையா, மு.க.ஸ்டாலின் அவர்களே?

செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? சமக்ர சிக்ஷாவின் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின்படி, 36 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில், 35 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!
  • Leave a Reply