திமுகவினரின் குழந்தைகள் என்றால் மட்டும் அப்படியா? காலாவதியான கொள்கை.. அண்ணாமலை கடும் தாக்கு!

Author: Hariharasudhan
17 February 2025, 7:46 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, திமுகவின் கடைசி கவுன்சிலர் வரை, அவர்களது குழந்தைகள் மூன்று மொழிகள் கொண்ட பள்ளிகளில் படிக்கின்றனர் என அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், “தனியார் பள்ளிகளில் படிக்கும் திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகள் கற்கலாம். ஆனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா?

அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா? நானும் ஆரம்பத்தில் அரசியலில் தேசியக் கட்சிகள் என்றால் தூரத்தில் வைத்துதான் பார்த்தேன். ஆனால் அதற்குப் பிறகுதான் எனக்கு அதன் அருமை தெரிந்தது.

குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டதன் காரணமாகவே கொண்டு வரப்பட்டதுதான் புதிய கல்விக் கொள்கை. ஆனால், தமிழை வைத்து இங்கே திமுக பிழைப்பு நடத்தி வருகிறது. தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் 56 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

Annamalai condemns DMK

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி மற்றும் ஐபி பாடத்திட்டத்தின் கீழ் 30 லட்சம் பேர் படிக்கின்றனர். அதாவது தமிழகத்தைப் பொறுத்தவரை, குறைந்தது 30 லட்சம் மாணவர்கள் மூன்று மொழிகளைப் படித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, திமுகவின் கடைசி கவுன்சிலர் வரை, அவர்களது குழந்தைகள் மூன்று மொழிகள் கொண்ட பள்ளிகளில் படிக்கின்றனர்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மகன் கூட மூன்றாவது மொழியாக பிரஞ்சு படிக்கிறார். ஆனால், ஏழை எளிய குடும்பங்களில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் மூன்றாவது மொழியில் படிக்கக் கூடாதா? 2024ஆம் ஆண்டில் வந்த ஏசர் ஆய்வு முடிவுகளின் படி, இரண்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் ஒரு பாராவை மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு படிக்கத் தருகின்றனர்.

அதில், 83 சதவீத மூன்றாம் வகுப்பு மாணவர்களால் படிக்க முடியவில்லை. 5ஆம் வகுப்பில் 63 சதவீதம் பேருக்கு படிக்கத் தெரியவில்லை. 8ஆம் வகுப்பில் 38 சதவீதம் பேருக்கு படிக்க முடியவில்லை. ஆனால், திமுகவினரின் பிள்ளைகள் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அதேநேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவலம் இழைத்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?

இதையும் படிங்க: உண்மையிலேயே TVK யாருக்குச் சொந்தம்? விஜயின் பின்னணி இதுவா?

தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?

தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!