லாரியில் நானும் செல்வேன்.. நெல்லையில் மருத்துவக் கழிவுகள்.. அண்ணாமலை கடும் எச்சரிக்கை!

Author: Hariharasudhan
17 December 2024, 1:30 pm

நெல்லை மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவுகள் குவியலாக கொட்டப்பட்ட நிலையில், இதற்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், சீதப்பன்நல்லூர் அருகே உள்ள நடுக்கல்லூர் மற்றும் பலவூர் உள்ளிட்ட பல இடங்களில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில், கடந்த 2 நாட்களாக மூட்டை மூட்டையாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன.

குறிப்பாக, திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் அதிகப்படியாக கொட்டப்பட்டுள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த மருத்துவக் கழிவில் மருத்துவமனையின் அனுமதிச் சீட்டுகள், ரத்தக் கசிவுகள், பஞ்சுகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் உள்ளிட்டவற்றின் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறு நடப்பது முதல்முறை அல்ல எனவும், இதனால் புற்றுநோய் பாதிப்பு வரை வரலாம் என்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார்.

Kerala Medical waste dumped in Nellai nadukkallur

கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன.

ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் திமுக அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக் கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது.

இதையும் படிங்க: குளித்துக் கொண்டிருந்த கொளுந்தியா… அக்கா கணவரின் சபல புத்தி : கடைசியில் டுவிஸ்ட்!

அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதனைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன. உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் திமுக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…