அமித்ஷாக்கு கடிதம் எழுதப் போறோம்.. திருப்பூரில் அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
Author: Hariharasudhan6 December 2024, 4:22 pm
திருப்பூர் மூவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிக்கை வைக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருப்பூர்: சமீபத்தில், திருப்பூர் பல்லடம் அருகே தோட்டத்து வீட்டில் இருந்து மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று (டிச.06) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அண்ணாமலை, “தெய்வசிகாமணியின் மருமகளைப் பார்த்து ஆறுதல் தெரிவித்து உள்ளோம். நிறைய கேள்விகள், வலிகள் இருந்தாலும் கூட நாங்கள் எல்லோரும் தமிழக போலீசாருடன் உள்ளோம். இந்த வழக்கை மிகத் தீவிரமாக போலீசார் கையில் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 14க்கும் மேற்பட்ட தனிப்படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு, இந்த வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கடிதம் எழுத உள்ளோம். போலீசார் விரைந்து செயல்பட்டால் கூட, குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்புக் குழுவை அமைத்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க இருக்கிறோம்.
இதையும் படிங்க: லாட்டரியில் அடித்த ஜாக்பாட் : 5 வருட காத்திருப்புக்கு ரூ.12 கோடிக்கு அதிபதி!
அதேநேரம், தமிழகத்தில் சிபிஐ அதிகாரிகள் வருவதற்கான அனுமதி இல்லை. முதலமைச்சர் ஸ்டாலினிடம் வைக்கக்கூடிய ஒரே வேண்டுகோள், இந்த கோரிக்கையை முதலமைச்சரும் செவி சாய்க்க வேண்டும். கொங்கு பகுதியில் இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முதலும், முடிவுமாக இப்பிரச்னை இருக்க வேண்டும். போதை கலாசாரம், சமூக வலைத்தளங்களில் ஆபாசமான பதிவுகள், வீடியோக்கள் போன்றவற்றைப் பார்த்து இன்றைய தலைமுறை பார்த்து வளர்கின்றனர். அரிவாள் கலாசாரமே இல்லாத கொங்கு பகுதியில் தற்போது இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் போகிறோம். எனவே, இதற்காக தமிழக அரசு இசைவு கொடுக்க வேண்டும். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு சிபிஐ விசாரணை கேட்டால் அதற்கு சில வாரங்கள் எடுக்கும். எனவே, முதலமைச்சரும் இந்த விஷயத்தை புரிந்துகொண்டு, பல்லடம் மூவர் கொலைச் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும். சில வழக்குகளுக்கு சிபிஐ அதிகாரிகளே சரியாக இருப்பார்கள் என்பதை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.