வரலாற்றை திரித்து கூறுகிறார் அண்ணாமலை.. தன்மானத்தை விட்டுத் தர முடியாது : எஸ்பி வேலுமணி பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2023, 3:45 pm

வரலாற்றை திரித்து கூறுகிறார் அண்ணாமலை.. தன்மானத்தை விட்டுத் தர முடியாது : எஸ்பி வேலுமணி பரபரப்பு பேச்சு!!

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும். அதிமுக கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும் அவர்கள் செல்லும் நோட்டு.,டாலர் நோட்டு; கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த இத்துப்போன செல்லாத நோட்டு என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “திமுக ஆட்சி போக வேண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர் எனவும் மதுரை மாநாட்டிற்கு செல்ல உணவு கூட வேண்டாம் வண்டி தயார் செய்து தந்தால் போதும் என கூறி தொண்டர்கள் எழுச்சியுடன் வந்தனர் என்றும் கூறினார்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்த மக்களும் நன்றாக இல்லை எனவும் மதுரை மாநாட்டை பார்த்து திமுகவினர் பயந்து விட்டதாகவும் ஆட்சி போய்விடும் என காவல்துறையினர் பயந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.


மதுரை மாநாட்டை பற்றி தெரியாமல், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை படிக்காமல் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார் எனவும் கட்சிக்காக உழைக்காமல் உதயநிதி ஸ்டாலின் பதவிக்கு வந்து பெரிய தலைவராகி விட்டார் எனவும் தெரிவித்தார்.

அண்ணா ஏழைகளுக்காக ஆரம்பித்த கட்சி இன்று குடும்ப சொத்தாக மாறி விட்டதாகவும் எங்களுக்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் எனவே அவரது கருத்தே எங்களது கருத்து எனவும் கூறியதுடன், வேலுமணி, தங்கமணி பாஜக பற்றி பேசவில்லை என சிலர் சொல்லும் வேளையில் எங்களுக்கு எதிரி திமுக தான்.,இருந்தாலும் கூட்டணிக்காக நாங்கள் தன்மானத்தை விட்டு தர மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச கூடாது எனவும் ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை எனவும் அண்ணா பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை எனவும் பெரியார் வந்த பின்னர் தான் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.
அண்ணா மன்னிப்பு கேட்டதாக உண்மைக்கு புறம்பான விஷயங்களை அண்ணாமலை பேசியிருக்க கூடாது என்றும் இது ஒரு தலைவருக்கு தகுதியல்ல., அண்ணாமலை உண்மைக்கு புறம்பாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

எடப்பாடி பழனிசாமி கிணற்றில் குதிக்க சொன்னாலும் குதிப்போம்.,எனவே எங்களுக்குள் சிண்டு முடியும் வேலையை திமுகவினரும், சில பாஜகவினரும் செய்கின்றனர் எனவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தான் 40 தொகுதிகளிலும் வெல்லும் எனவும் தெரிவித்தார்.

நமக்குள் இருப்பது குடும்ப சண்டை தான் என்பதால் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி, அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வராமல் கோவை மாவட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

ஒட்டுமொத்த மக்களும் முதலமைச்சராக எடப்பாடி வர வேண்டும் என நினைக்கின்ற நிலையில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

எல்லா பிரச்சனைகள் பற்றியும் அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தெளிவாக பேசி விட்டதாகவும் எதிர்கட்சி தலைவராக சிறப்பாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்றும் கூறினார்.

அண்ணாமலை மக்களுக்காக உழைத்தவர்களை பற்றி தேவையில்லாமல் பேசியிருக்க கூடாது எனவும் அண்ணா பற்றி உண்மைக்கு புறம்பாக அண்ணாமலை பேசியிருக்க கூடாது எனவும் கூறிய அவர், எங்களுக்கு கொள்கை தான் முக்கியம்.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். கொள்கைகளை காப்பாற்றுவது எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும் என்றும் சுட்டிக்காட்டினார்.

திமுகவினரும், சில பாஜகவினரும் எங்களுக்குள் சிண்டு முடிந்து விடுகின்றனர் எனவும் அண்ணா பற்றி அண்ணாமலை பேசியதற்கு சி‌.வி.சண்முகம் எதிர்வினை ஆற்றினார் எனவும் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி சொல்வதை நாங்கள் செய்வோம் என்றும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்றும் தெரிவித்த வேலுமணி, எடப்பாடி பழனிசாமி கருத்தே எங்களது ஒட்டுமொத்த கருத்து” எனவும் உறுதிபட தெரிவித்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!