அண்ணாமலைக்கு புரிதலே இல்லை… தனிச்சட்டம் இருக்குனு தெரியாதா? அமைச்சர் அட்டாக்!!!
Author: Udayachandran RadhaKrishnan16 November 2023, 2:45 pm
அண்ணாமலைக்கு புரிதலே இல்லை… தனிச்சட்டம் இருக்குனு தெரியாதா? அமைச்சர் அட்டாக்!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சர்கள் (நிலை-3) மற்றும் தட்டச்சு பணியிடங்களுக்காக 32 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தேர்வான 32 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாகவும், தமிழ்நாடு கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் படித்து வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என காலிபணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், தொழில் முனைவோர்களும் தமிழ்நாட்டை நோக்கி வருகை தருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல், ஏற்கனவே 5500 காலிபணியிடங்களை நிரப்ப நான்கரை லட்சம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு,மூன்றரை லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளதாக கூறிய அவர், அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாகவும், 36 மாவட்டங்களில் சிறப்பாக பணி நடைபெற்றுள்ளது என்றும்,மீதம் உள்ள 2 மாவட்டங்களுக்கான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை புரிதல் இல்லாமல் பேசுவதாக கூறிய அவர், கூட்டுறவுக்கென தனி சட்டம் உள்ளது என்றும் அதன் அடிப்படையில் பணி நியமனங்கள் ஒளிவுமறைவின்றி நடைபெற்று வருவதோடு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதவு செய்யாதவர்களும் தேர்வில் கலந்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
வெங்காய விலையை கட்டுப்படுத்த வெங்காயம் விற்பனையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறை செயலி சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், 3 மாதத்தில் கூட்டுறவு செயலியை மேலும் வலிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.