தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி இல்லாத தலைவர் என்றால் அது அண்ணாமலைதான் : அதிமுக எம்பி சிவி சண்முகம் கடும் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 December 2023, 4:21 pm
தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி இல்லாத தலைவர் என்றால் அது அண்ணாமலைதான் : திருப்பி அடித்த அதிமுக எம்பி சிவி சண்முகம்!!
அமலாக்கத் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது குறித்து இன்று பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் குறித்தும் பேசியிருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று விமர்சித்திருந்தார். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். சி.வி.சண்முகம்: விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் நடத்தப்படும் கார் பந்தயம் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “சென்னை இப்போது மழையால் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. இந்த அரசு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் பணிகளைச் செய்துள்ளதாகவும் இன்னும் மூன்று கிமீ மட்டுமே பணிகள் பாக்கி இருப்பதாகச் சொன்னார்கள்.
93% பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் மழை பெய்தால் ஒரு துளி மழைநீர் கூட தேங்காது என்றார்கள். ஆனால், இன்று ஒட்டுமொத்த சென்னையும் மழையால் தத்தளிக்கிறது. மருத்துவமனைகளில் மழை நீர் தேங்கியுள்ளது, சாலைகளிலும் பாதிப்பு இருக்கிறது. இதைக் கவனித்துச் சரி செய்ய வேண்டிய முதலமைச்சரும் அமைச்சரும் அதிகாரிகளும் கார் பந்தயத்திற்குக் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
திராவிட மாடல் அரசு மக்களைக் கவனிக்காமல் பார் பந்தயத்தை நடத்துகிறார்கள். வரும் 8ஆம் தேதி நடத்தும் இந்தப் போட்டிக்கு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் வரும் நாட்களில் புயல் வெள்ளம் ஏற்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதைக் கவனிக்காமல் கார் ரேஸை நடத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள்.
அதிலும் ஒமந்தூரர் மருத்துவமனை அருகே உள்ள சாலை, அண்ணா சாலை, பாதுகாப்புத் துறை அலுவலகம் இருக்கும் இடங்கள், துறைமுகம் செல்லும் சாலைகளில் இந்த ரேஸை நடத்துகிறார்கள். அதற்காக மட்டும் 242 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். நமது வரிப் பணத்தை எடுத்து இதற்குச் செலவு செய்கிறார்கள். நன்றாக இருக்கும் சாலைகள் மீது மீண்டும் சாலை போடுகிறார்கள். இவை அனைத்தும் வெறும் அந்த 6 நாட்களுக்காக. மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உதவி செய்யாத தமிழ்நாடு அரசு கார் பந்தயம் நடத்தக் கவனம் செலுத்துகிறார்கள்.
தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதிகள் இருப்பதாக அண்ணாமலை சொல்கிறார். அதுதான் அதிசயமாக இருக்கிறது. அவரையே அவர் சொல்லிருக்கிறார் போல.. தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி அண்ணாமலை தான். சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்” என்று தாக்கி பேசினார்.