’இந்தி தேசிய மொழி அல்ல’.. ஒத்துக்கொண்ட அண்ணாமலை.. ஆனால்?
Author: Hariharasudhan11 January 2025, 10:45 am
இந்தி தேசிய மொழி அல்ல என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதை ஏற்றுக் கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: சமீபத்தில், கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது உரையைத் தொடங்கும் முன்பு, “இந்தியில் பேசவா? ஆங்கிலத்திலா, தமிழா?” என மாணவர்கள் மத்தியில் கேட்டார். அதற்கு, ‘தமிழ்’ என அங்கிருந்தவர்கள் கூறினர்.
இதனையடுத்து பேசத் தொடங்கிய அஸ்வின், “இந்தி தேசிய மொழி அல்ல. அது அலுவல் மொழி தான்” என்றார். இந்த விவகாரம் சலசலப்ப்பை ஏற்படுத்தியது. பின்னர், இது குறித்து பேசிய திமுக டி.கே.எஸ்.இளங்கோவன், “பல மாநிலங்கள் பல்வேறு மொழிகளைப் பேசும்போது, இந்தி எப்படி தேசிய மொழியாகும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “அஸ்வின் கூறியது சரிதான், நானும் அதையேச் சொல்கிறேன். இந்தி தேசிய மொழி அல்ல; அது ஒரு இணைப்பு மொழி; அது ஒரு வசதிக்கான மொழி. நான் எங்கும் இந்தி தேசிய மொழி எனச் சொல்லவில்லை. அதேநேரம், வேறு யாரும் அவ்வாறு சொல்லவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தி மொழியைத் திணிக்க தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு டிடி தமிழ் அலுவலகத்தில் நடந்த இந்தி மாத விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டதை அடுத்து, தமிழகத்தில் பெரும் மொழி சர்ச்சை மீண்டும் உருவெடுத்தது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்கும் திமுக.. யார் இந்த வி.சி.சந்திரகுமார்?
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மாத விழாவை எச்சரிக்கையுடன் கொண்டாட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.