இறை நம்பிக்கையில்லாதவர் தேரை இழுக்கலாமா…? அமைச்சரை எதிர்த்தவர்களை கைது செய்தது நியாயமா…? போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை!!
Author: Babu Lakshmanan11 June 2022, 5:06 pm
சென்னை : குமரியில் அமைச்சர் தேரை வடம் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்த போலீசாரைக் கண்டித்து இன்று மாலை 10 இடங்களில் பாஜக போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் பிரசிதிபெற்ற குமாரகோவில், வேளிமலை முருகன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்திருவிழா நடைபெற்றது. இதில் தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு தேரைவடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது, பாஜக, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், அமைச்சர்கள் தேரை வடம்பிடித்து இழுக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக, நாகர்கோவில் எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன் உட்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்ததைக் கண்டித்து குமரியில் இன்று மாலை 10 இடங்களில் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தொல்காப்பியத்தில் சேர நாட்டு ஏரகம், என்றும் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையில் திருவேரகம் என்றும் பாடப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியமிக்க கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள குமாரகோவில் முருகன் கோவிலில் வைகாசி தேரோட்டம் இன்று நடைபெற்றது!
இதில் இறை நம்பிக்கை இல்லாத மாற்று மதத்தைச் சார்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் உள்ளிட்டோர் தேர்வடம் இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்க வந்தபோது பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுமக்களை மிரட்டியும், ஆதரவு தெரிவித்த பாஜகவினரை கைது செய்தும், திமுகவினர், சீருடை அணியாத காவல்துறையின் உதவியுடன் இரண்டு தேர்களையும் நகர்த்தி, தெருவிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். மதச்சார்பின்மை என்ற பெயரிலே ஒரு பிரிவினருக்கு ஆதரவாகவும், தமிழரின் பாரம்பரிய மரபுக்கு எதிர்ப்பாகவும் செயல்படுவது ஆட்சிக்கு அழகல்ல.
எதிர்ப்பு தெரிவித்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, RSS பேரியிக்கத்தின் குமரி சங்க சாலக் திரு. ராஜேந்திரன், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் திரு. மிசா சோமன், விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்க மாநில பொறுப்பாளர் திரு. காளியப்பன் பாஜக மாவட்ட தலைவர் திரு. தர்மராஜ் அவர்கள் உட்பட பலர் கைதாகி உள்ளனர்.
நீதிக்காக போராடிய பாஜகவின் பொறுப்பாளர்களையும், பக்தர்களையும் கைது செய்த காவல்துறையும், உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கன்னியாகுமரியில் இன்று மாலை 10 இடங்களில் போராட்டம் நடைபெறும், என தெரிவித்துள்ளார்.