மீண்டும் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசை குறை கூறுவதே இங்குள்ளவர்களின் முழு வேலையாக உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 43 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கியது தொடர்பான வெள்ளை அறிக்கையை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளேன். மேலும், மீண்டும் 36 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வருகின்ற மத்திய பட்ஜெட்டில் பெரிய அளவிலான திட்டங்கள் தமிழகத்திற்கு வரும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டின் நிதி நிலைமை திவாலாக போவதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: 3ஆம் ஆண்டு தூ(ங்கும்)வக்க விழா.. பரபரப்புக்கு உள்ளான பேனர்.. போலீஸ் கூறுவது என்ன?
இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கம் தென்னரசு, பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார். அடிப்படை புரிதல் இன்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.