ஆசிரமம் தொடங்கிய சர்ச்சை சாமியார் அன்னபூரணி…தனி உடை, உணவு ரூல்ஸ் இல்லை: ஆன்மீக பயிற்சி தர்றாங்களாம்..!!
Author: Rajesh4 April 2022, 3:18 pm
திருவண்ணாமலை: சமூகவலைத்தளத்தில் வைரலான பெண் சாமியார் அரசு அன்னபூரணி திருவண்ணாமலையில் சொந்தமாக நிலம் ஆசிரமம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த இராஜாதோப்பு பகுதியில் சமூகவலைத்தளத்தில் வைரலான பெண் சாமியார் அன்னபூரணி ஆசிரமம் கட்ட நிலம் வாங்கி இன்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தான் ஒரு சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி கலந்து கொண்டார்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் பேசிய பெண் சாமியார் தான் அனைத்து பொது மக்களுக்கும் ஆன்மீக பயிற்சி வழங்குவதாகவும், ஆன்மீக பயிற்சி வழங்கி அவர்களுக்கு முக்தி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஆன்மிகம் என்றால் அதற்கான தனி ஆடை அணிய தேவையில்லை, உணவு பழக்க வழக்கங்கள் எதுவும் தேவை இல்லை, ஆன்மீகமும் நடைமுறை வாழ்க்கையும் ஒன்றுதான் என்பதை புரியவைக்க உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அன்னபூரணி அரசு என்ற பெண் சாமியார் பல்வேறு சம்பவங்களில் சிக்கி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் தற்போது புதியதாக திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பல்வேறு பெரு நகரங்களை விடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரமம் தொடங்க காரணம் என்னவென்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தன்னால் அதிக பணம் செலவழிக்க முடியாது, குறைந்த அளவில் பணம் செலவழித்து இந்த இடத்தை வாங்கியதாகவும் இந்த இடத்தில் வரும் பொதுமக்களுக்கு ஆன்மீகம் மற்றும் அதனை சார்ந்து வரும் அனைத்து விஷயங்களையும் போதித்து அவர்களுக்கு முக்தி அடைய பயிற்சி தருவதாக தெரிவித்தார்.