‘ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும்…நாங்க புறக்கணிக்க மாட்டோம்’: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு..!!

Author: Rajesh
14 April 2022, 3:17 pm

சென்னை: ஆளுநர் இன்று மாலை அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுகவை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சிககள் இன்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதனை புறக்கணிப்பதாக முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது.

நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது போன்ற காரணங்களை பட்டியலிட்டு, மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஆளுநர் அதிகார மையமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அக்கட்சி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தது.

அதன் தொடர்ச்சியாக, தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது, தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாக உள்ளது; தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆளுநரின், தேநீர் விருந்து அழைப்பை புறக்கணிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை, புறக்கணிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியும் தெரிவித்துள்ளது. இதேபோன்று, ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும் என்று அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக, இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநரை அமைச்சர்கள் தங்கம்தென்னரசு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்தனர். நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழக அரசு அனுப்பி வைத்த கோப்புகளை ஆளுநர் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில், அது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

தேநீர் விருந்தில் கலந்துகொள்வது சட்டமன்றத்தின் மாண்பை குழைப்பதாக இருக்கும். தமிழக சட்டசபையின் மாண்பையும் மக்களையும் தமிழ்நாடு ஆளுநர் மதிக்காததால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகவும் அமைசர் தங்கம் தென்னரசு அப்போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Saindhavi GV Prakash emotional moment மீண்டும் ஒரே மேடை..ஜிவி பிரகாஷை பாராட்டிய சைந்தவி…!
  • Views: - 1230

    0

    0