படிக்காமல் ஒரே நேரத்தில் 333 தீர்மானம் நிறைவேறியதாக அறிவிப்பு : கோவை மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2024, 2:18 pm
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெறுகின்றது. இன்று 346 தீர்மானம் ஓரே நேரத்தில் கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே 100 தீர்மானம் முதலில் கொடுத்த நிலையில் நேற்று இரவு 250 க்கும் மேற்பட்ட தீரமானங்களை கொடுத்து இருக்கின்றனர். எதற்காக இப்படி கொடுக்கின்றனர்.
இந்த மன்ற தீர்மானங்களை யாரும் படிக்க வாய்ப்பில்லை. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடத்து இருக்கின்றது என குற்றச்சாட்டு மன்ற கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர்கள் ஆன்லைன் அப்ரூவல் கொடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்து முறையிட்டனர்
பின்னர் தனது இருக்கைக்கு வந்த அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் ஒரே நேரத்தில் 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் தீர்மானத்தை படிக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை எனவும் கூறினார்
இதனால் திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில் வாக்குவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே 333 தீர்மானங்களும் எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக துணை மேயர் வெற்றிச்செல்வன் அறிவித்தார்.
இதனால் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் குருக்கிட்டு தற்போதைக்கு அமைதியான முறையில் மன்ற கூட்டம் நடைபெற உதவ வேண்டும் எனவும் இது குறித்து பின்னர் விவாதிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டதை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் சமாதானம் அடைந்தனர்.
முன்னதாக ஏற்கனவே நேற்று முன்தினம் திமுக கவுன்சிலர்களுடன் தனியாக ஆலோசனை நடத்திய கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலாளர்கள், மேயர் இன்றி துணை மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் நடத்தப்படுவதால் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறும் தீர்மானங்கள் குறித்து யாரும் விவாதம் எழுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்திய நிலையில் இன்றைய தினம் மாமன்ற கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.