அன்னூருக்கு அண்ணாமலை இன்று வருகை… பாஜக பேனர்களை அகற்றிய போலீசார்… தொண்டர்கள் திடீர் சாலை மறியல்!!
Author: Babu Lakshmanan7 December 2022, 9:40 am
கோவை ; அன்னூரில் சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்ற மறுத்து 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
கோவை மாவட்டம் அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அன்னூர் வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக சத்திசாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் பேனர்கள் வைத்துள்ளனர். மேலும், சாலை நடு நெகிலும் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று மாலை அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு போலீசார் பாஜகவினருக்கு அறிவுறுத்தினர். அப்போது, பாஜக தொண்டர்கள் வரவேற்பு பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பாஜக கொடி கம்பங்களை அகற்ற முடியாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் திரண்ட 200க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் சத்தி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டு உள்ளவர்களை கலைந்து போக கூறி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பாஜக தொண்டர்களின் திடீர் சாலை மறியல் காரணமாக மேட்டுப்பாளையம் மற்றும் சத்தி சாலையில் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இதனால் அன்னூரில் பரபரப்பான சூழல் நிலவியது.