தருமபுரியில் தொடரும் சோகம்… மேலும் ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி பலி… துடிதுடித்து உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ காட்சி..!!
Author: Babu Lakshmanan18 March 2023, 12:39 pm
தருமபுரியில் 3 யானைகள் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு வந்த யானை காரிமங்கலம் வழியாக இன்று காலை 7.30 மணி அளவில் ஒரம்பட்டி, வகுப்பம்பட்டி பகுதியில் நுழைந்து வகுரப்பம்பட்டி, மோட்டூர், ஜடையன் கொட்டாய் வழியாக கம்பைநல்லூர் அருகே உள்ள கெலவள்ளி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கு ஏரிக்கரை ஓரத்தில் செல்வராஜ், கஸ்தூரி தோட்டம் அருகே 37 வயது காட்டுயானை ஒன்று நடந்து சென்று கொண்டிருந்தது.
அந்த சமயம் அங்கு இருந்த EB லைனில் இருந்து மின்சாரம் பாய்ந்து யானை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மொரப்பூர், பாலக்கோடு, தர்மபுரி, வனத்துறையினர் மற்றும் கம்பைநல்லூர் காவல்துறையினருக்கு அளித்த தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் உயிரிழந்த காட்டு யானையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானை உயிரிழந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதுவரையில் 5 யானைகள் உயிரிழந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தொடர்ச்சியாக யானைகள் மரணம் அடைந்து வருவதால், இது இயற்கையை பாதுகாக்கும் யானையின் அழிவு அல்ல, இயற்கையே அழிவு என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கவும், தொடர்ந்து யானைகள் மரணம் அடைந்து வருவதை தடுக்க, வனத்துறையினர் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.