அரசியல் பேசற மாதிரி இருந்தா எதுக்கு ஆளுநர் வேஷம்? நீங்க பாஜக, ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளரா? அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan6 October 2023, 1:29 pm
அரசியல் பேசற மாதிரி இருந்தா எதுக்கு ஆளுநர் வேஷம்? நீங்க பாஜக, ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளரா? அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!
திருப்பத்தூர் நாயக்கனேரி ஊராட்சி மன்ற பட்டியலின தலைவர் பதவியேற்பு குறித்த ஆளுநர் பேச்சுக்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏற்காதது தொடர்பாக ஆளுநர் ரவி குற்றசாட்டியுள்ளார். ஊராட்சி மன்றத் தலைவரை பதவி ஏற்க விடாமல் தடுப்பதாக ஆளுநர் ரவி பேசியுள்ளார்.
திருப்பத்தூர் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் விவகாரத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் பேசுகிறார்.
உயர்நீதிமன்றம் உத்தரவைக் கூட படிக்காமல் ஆளுநர் ரவி, பாஜக – ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் போல் பரப்புரை செய்து வருகிறார். ஊராட்சிமன்ற தலைவர் இந்துமதி, ஒதுக்கப்பட்ட இடத்திற்குரிய பிரிவை சேர்ந்தவராக இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன என்பதைக் கூட தெரியாமல் பேசுவதா? என கேள்வி எழுப்பி, நீதிமன்றத்தின் உத்தரவால் தான் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏற்கவில்லை என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 4,357 ஊராட்சிகள் தலித், பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டின் அமைதிக்கு, குந்தகம் விளைவித்து வருவது ஆளுநர் பதவி வகிக்கும் ஆர்.என்.ரவிக்கு அழகல்ல.
அரசியல் பேச நினைத்தால் அரசியல் தலைவராக ஆளுநர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். பட்டியலின தலைவர் பதவியேற்பு பற்றி அமைதியை சீர்குலைக்கும் வகையில் பரப்புரை செய்வதா?.
தமிழக அரசின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புரை செய்கிறார். சிறப்பாக சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டி வரும் திராவிட மாடல் அரசை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது.
உண்மைக்கு மாறான தகவல்களை கூறுவதை விடுத்தது, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள், அரசு நிர்வாக கோப்புகளில் கையொப்பமிடுவதில் நேரத்தை செலவிட வேண்டும்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தொடர ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற லஞ்ச வழக்குகளில் கையொப்பமிடாமல் வைத்துள்ளார் ஆளுநர்.
நேரத்தை உருப்படியாக செலவிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.