‘நீங்க விட்டுட்டு போன ஒரு மணிநேரத்துல கீழ வந்திடும்’… அகத்திய மலையில் அரிக்கொம்பன் யானையை விட பொதுமக்கள் எதிர்ப்பு..!!
Author: Babu Lakshmanan5 June 2023, 8:43 pm
நெல்லை ; தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு அகத்திய மலையில் விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம் நகர் பகுதிக்குள் கடந்த 27ஆம் தேதி அரிக்கொம்பன் யானை திடீரென நகர் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த பொதுமக்களை விரட்டி வாகனங்களை சேதப்படுத்தியது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தலை தெறிக்க ஓடி சென்றனர். அப்போது, யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அரிக்கொம்பன் யானையை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இருப்பினும், வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.
மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், கம்பம் அருகே உள்ள சண்முகா அணை பகுதியில் யானை உலவி வந்தது. அப்போது, ஒரு வழியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.
இதனிடையே, நெல்லை மணிமுத்தாறு களக்காடு வனப்பகுதியில் யானையானது விடப்பட இருக்கிறது. இந்த நிலையில், மனித உயிர்களை கொன்று குவித்து வரும் யானையை களக்காடு பகுதியில் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அரிக்கொம்பன் யானையை கேரளாவில் கொண்டு சென்று விடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.