‘அட, அண்ணாமலைய விடுங்க… திமுக-காரங்க பேச்சை கவனிச்சீங்களா…?’ ; அதிமுகவுக்கு ரிமைன்ட் பண்ணும் அர்ஜுன் சம்பத்..!!
Author: Babu Lakshmanan19 September 2023, 10:03 pm
அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட மகளிர் பெண்களுக்கான திட்டம் நிறுத்தியதால் தான், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த முடிந்ததாக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- 25 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த மகளிர்க்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. இதனால் பெண்களுக்கான சமநீதி, சமத்துவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
விஸ்வகர்மா யோஜனா திட்டம் மண்பானை, தச்சர்கள், முடி திருத்துபவர்கள் உள்ளிட்ட 18 வகையான கைவினைக் கலைஞர்கள் 5 சதவீத வட்டி என்கிற அடிப்படையில் ஏராளமான கைவினைக் கலைஞர்கள் பயன் பெறுவார்கள். தமிழகத்தில் உள்ள திராவிட அமைப்புகள் கைவினைக் கலைஞர்களை கொச்சைப்படுத்தும் வகையில், குலத் தொழில் என்று இழிவு செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது. ஒரே நாடு ஒரே ரேசன் கடை என கொண்டு வந்த போது, ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்த நிலையில், தற்போது ரேசன் அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.
அதிமுக, பாஜக கூட்டணி முறிவு என்று அதிகாரபூர்வமாக இரண்டு தரப்பிலும் அறிவிக்கப்படவில்லை. அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல் மட்டுமே நிறைவடைகிறது. வரலாற்று உண்மையைப் பேசிய அண்ணாமலையை எதிர்ப்பதை விட்டுவிட்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து தவறாக பேசி வரும் திமுகவினரை, அதிமுகவினர் எதிர்க்க வேண்டும்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சட்டப்படி தான் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்து இயக்கத்தின் மூத்த பேச்சாளரான மணியன் வயது முதிர்வு ஏற்பட்ட நிலையிலும், பிசிஆர் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிறையில் முறையாக வசதிகள் செய்து தரவில்லையெனில், இந்த ஆட்சி கலைக்கப்படும் என எச்சரிக்கை விடுப்பதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
0
0