தாய்மொழி உச்சரிப்பு சரியாக இல்லை.. ரூ.1 லட்சம் சன்மானம் அறிவித்த அர்ஜுன் சம்பத்!
Author: Hariharasudhan21 February 2025, 4:55 pm
தேசிய கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பு உள்ளது என்பதை நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
மதுரை: உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மதுரை, தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அர்ஜுன் சம்பத், “எதிலும் தமிழ் என்பது நிலை நாட்டப்பட வேண்டும். தமிழகத்தில் தமிழைப் பயிற்று மொழியாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் 5ஆம் வகுப்பு வரை தமிழை மட்டுமேக் கற்பிக்க வேண்டும். 5ஆம் வகுப்புக்கு மேல் மும்மொழி கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பு உள்ளது என்பதை நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, தமிழகத்திலும் அமல்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசிடம் நிதி பெற்று, தமிழக அரசு ஆங்கில மொழியை வளர்க்கிறது.
மத்திய அரசின் நிதியை, தமிழக பள்ளிக்கல்வித்துறை தவறாகப் பயன்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள குழந்தைகளிடம் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை. தமிழகத்தில் தாய்மொழிக் கல்வியின் தரம் தாழ்ந்ததாக உள்ளது. தாய்மொழி வாயிலாக மாநிலங்களில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: சன் டிவியை மிஞ்சும் விஜய் டிவி.. இந்த வாரம் முதலிடம் பிடித்த சீரியல் எது தெரியுமா?
முன்னதாக, மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றினால் தான் நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் பேசியதற்கு, ஆளும் திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், மீண்டும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த தமிழக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்” என இருமொழிக் கொள்கையை தனது தாய்மொழி தின வாழ்த்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.