உயிரிழந்த ராணுவ வீரருக்கான இழப்பீட்டு தொகையை பங்கு கேட்டு தகராறு… ராணுவ வீரரின் மனைவியை அடித்துக் கொன்ற மாமனார்..!!
Author: Babu Lakshmanan12 November 2022, 10:40 am
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் மனைவியை கல் மற்றும் கம்பால் தலையில் தாக்கி கொலை செய்த அவரது மாமனார் மற்றும் அவரது கொழுந்தனாரை இரணியல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் மணக்கரை சேர்ந்தவர் ஐயப்ப கோபு (42). இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் விடுப்பில் வீட்டிற்கு வந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அரசிடமிருந்து இழப்பீடாக வழங்கப்பட்ட பணம் அவரது மனைவி துர்க்கா என்பவருக்கு கிடைத்துள்ளது.
அந்த பணத்தில் தங்களுக்கும் பங்கு தர வேண்டும் என்று கேட்டு அவரது மாமனார் ஆறுமுகம் பிள்ளை மற்றும் கொழுந்தனார் மது ஆகியோர் சேர்ந்து துர்க்காவிடம் நேற்று மதியம் தகராறு செய்ததோடு, அருகில் கிடந்த சிமெண்ட் செங்கல் மற்றும் கம்பால் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், துர்கா பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார்.
இது குறித்து துர்க்காவின் உடன் பிறந்த அண்ணன் பகவத்சிங் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், துர்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, மாமனார் ஆறுமுகம் பிள்ளை, கொழுந்தனார் மது ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.