அய்யப்பனும் – கோஷியும் பட பாணியில் சம்பவம் : எருது விடும் விழாவில் இன்ஸ்பெக்டரின் சட்டையைப் பிடித்து மல்லுக்கட்டிய மிலிட்டரி மேன்..!!
Author: Udayachandran RadhaKrishnan24 January 2022, 6:34 pm
வேலூர் : தடையை மீறி நடந்த எருது விடும் விழாவை தடுக்க சென்ற காவலரை அவமதித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரின் வீடியோ வைரலாகி வருகிறது.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்ற நிலையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை முறையாக பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்ததால் பல் மாவட்டங்களில் எருது விடும் விழா தற்காலிக தடை விதித்து ஆட்சியர்கள் உத்தரவிட்ருந்தனர்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் கம்மவன்பேட்டை அருகே எருது விடும் விழா அனுமதியின்றி நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் காளைகளுடன் விளையாட்டில் பங்கேற்க வந்தவர்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேலூர் தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காரமடை ஏரிக்கரை பகுதியில் காவல் நிலைய ஆய்வாளர் இளவழகன் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கேவி குப்பம் அருகே உள்ள காங்குப்பம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் மோகன்ராஜ் என்பவர் காளையுடன் கம்மவன்பேட்டை பகுதிக்கு செல்ல முயன்றார்..
இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய ஆய்வாளர் இளவழகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர், ஆய்வாளரின் சட்டையை பிடித்து இழுத்தார். தொடர்ந்து ஆய்வாளரும் அவரை விலக்கிவிட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து வாக்குவாதம் முற்றியது.
இதையடுத்து மோகன்ராஜை காவல்துறையினர் அழைத்து சென்று வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உரிய விசாரணைக்குபின் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கூறியுள்ளார்.