‘ஓட்டுக்கு பணம்..நாட்டுக்கு அழிவு’: உள்ளாட்சி தேர்தலை நிறுத்தக் கோரி தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கைது..!!
Author: Rajesh16 February 2022, 12:36 pm
கோவை: உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஓட்டுக்கு பணம் விநியோகம் வெளிப்படையாகவே நடைபெறுவதாக மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் வந்த ஐந்து பேர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ” இதுவரை இல்லாத வகையில் தற்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பது வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி தரவில்லை. நீதிமன்றம் சென்று அதற்கான உத்தரவை பெற்று வந்ததற்கு பின்பு கூட அனுமதி கடிதம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
அதற்குள் தேர்தல் பிரச்சாரமே முடிந்துவிடும். தேர்தலை முறையாக நடத்தும் பொறுப்புள்ள மாநில தேர்தல் ஆணையமே முறைகேட்டிற்கு துணை நிற்கிறது. எனவே நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்.” என்றனர்.
தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தேர்தலுக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.