நாங்கள் மட்டும் என்ன? மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தின் மறுபக்கம்!
Author: Hariharasudhan14 November 2024, 11:00 am
மருத்துவருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா என கைதான நபரின் உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக இருந்த பாலாஜி என்பவரை, திடீரென ஒரு இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து, அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலும் வழங்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இச்சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு சரிவர அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கவில்லை என்பதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஸ்வரன் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார். எனவே, இச்சம்பவத்திற்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கைதான விக்னேஸ்வரனின் தாயார் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “என்னுடைய மகன் இப்படி செய்வான் என்று நினைக்கவில்லை” எனக் கண்ணீரோடு தெரிவித்து உள்ளார்.
மேலும், இது குறித்து விக்னேஸ்வரனின் உறவினர்கள் கூறுகையில், “எங்களிடம் எதுவும் சொல்லாமலே இந்த தவறை விக்னேஷ் செய்துள்ளார். மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்துவிட்டது என்று அவருக்கு சிகிச்சை அளிக்கிறீர்கள், ஆனால், அதே மருத்துவரால் தான் இங்கே ஒரு உயிர் பாதிக்கப்பட்டு உள்ளது. அதை ஏன் யாரும் பேச முன்வரவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் சோதனையில் லாட்டரி மார்ட்டின்.. விசிக பிரமுகர் வீட்டிலும் சோதனை!
அது மட்டுமல்லாமல், “மருத்துவருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா? அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு எதற்காக? நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும் என்பதற்காகத்தான்.. ஆனால், அவர் (மருத்துவர்) செலுத்திய ஊசி நுரையீரலைப் பாதித்தது. அதை ஏன் எங்களிடம் நீங்கள் கூறவில்லை? அதன் பிறகும், அந்த ஊசி தொடர்ந்து செலுத்தப்பட்டது. அதை ஏன் நீங்கள் நிறுத்தவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.