அதுவும் உயிரினம்தானே… கலை நிகழ்ச்சி என்ற பெயரில் பாம்புகளை துன்புறுத்திய கலைஞர் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2022, 5:15 pm
தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே எஸ்.குமாரபுரத்தில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் சித்தரவதை செய்யப்படும் பாம்புகள் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள எஸ்.குமாரபுரத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவில் கொடை விழாவினை முன்னிட்டு ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலைஞர் ஒருவர் பாம்புகளை வைத்து கலை நிகழ்ச்சி நடனம் ஆடினார். இதனை மக்கள் ரசித்து பார்த்தாலும், அவர் பாம்புகளை துன்புறுத்திய விதம் சகித்து கொள்ளும் வகையில் இல்லை.
அனைத்து ஜீவ ராசிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அனைவரது விருப்பம். வருமான நோக்கில் விலங்கினங்களை துன்புறுத்த கூடாது என்பது அரசின் விதி. அதற்கான சட்டங்களும் வரையறுக்கப்பட்டு, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கலை நிகழ்ச்சிகளில் விலங்கினங்களை வைத்து நிகழ்ச்சி நடத்தி வருவது சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இது போன்று வருமானத்திற்காக விலங்குகளை துன்புறுத்துவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .