போலீஸ் விசாரணையின் போது தாக்குதல்? தொழிலாளி மரணத்தில் திருப்பம்.. உடலை தோண்டி எடுக்க உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 1:28 pm
Autospy
Quick Share

போலீஸ் விசாரணையில் தொழிலாளி உயிரிழந்ததாக மனைவி தொடுத்த வழக்கை அடுத்து நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியுள்ளது.

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவர், திருப்பச்சாவடிமேடு பகுதியிலுள்ள டாஸ்மாக் மது அருந்தும் கூட உணவகத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி பணி முடிந்த பின்னர் உணவகத்திலேயே தங்கிவிட்டார். மறுநாள் ஏப்ரல் 10-ஆம் தேதி அப்பகுதியில் ரோந்து சென்ற விழுப்புரம் தாலுகா போலீஸார், 10 மதுப்புட்டிகளை பதுக்கி வைத்ததாகக் கூறி, அவரைக் அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீஸார், பின்னர் சொந்த பிணையில் விடுவித்தனர்.

இந்நிலையில் போலீஸார் தன்னைத் தாக்கியதாக மனைவி அஞ்சுவிடம் கூறிய ராஜா தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கணவர் ராஜாவை, அவரது மனைவி அஞ்சு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஜாவின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, கே.கே. சாலையிலுள்ள நகராட்சி சுடுகாட்டில் ராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், போலீஸார் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் என்றும், எனவே தனக்கு நியாயம் கிடைக்க மீண்டும் உடற்கூறாய்வு நடத்த வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் மூலம் ராஜாவின் மனைவி அஞ்சு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மேலும் படிக்க: மழை நீர்வடிகாலுக்காக குழி தோண்டும் போது விபரீதம்… சரிந்து விழுந்த கடை ; பொக்லின் இயந்திரத்தில் முட்டுக் கொடுத்த அதிகாரிகள்!!

இதை விசாரித்த நீதிமன்றம், ராஜாவின் உடல் மீண்டும் உடற்கூறாய்வு செய்து, அதற்கான அறிக்கையை குடும்பத்தினரிடம் 24 மணி நேரத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி, எஸ்.பி. தீபக் சிவாச், நீதித் துறை நடுவர் எண் 1 ராதிகா ஆகியோர் முன்னிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ராமலிங்கம், சென்னை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் மேற்பார்வையில் இன்று சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மறு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Views: - 282

0

0