அதிமுகவில் மவுசு கூடிய இபிஎஸ்… சட்டசபையில் ஓபிஎஸ்-க்கு இருக்கை மாற்றமா..? சபாநாயகர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
Author: Babu Lakshmanan24 February 2023, 6:48 pm
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிமன்ற உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு இருக்கை மாற்றப்பட்டுள்ளதா..? என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு செல்லும் என நேற்று தீர்ப்பை அறிவித்தது. இதனை தொடர்ந்து பொதுக்குழு தீர்மானப்படி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதை செல்லும் என தீர்ப்பின் மூலம் உறுதியாகிவிட்டது.
இதனிடையே, நெல்லை – களக்காடு அருகே வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சட்டசபையில் அதிமுகவின் உறுப்பினர் இருக்கையில் ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர் :- நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது. சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்லது சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து எல்லாமே சட்டப்பேரவை தலைவருடைய முழு பொறுப்பாகும். ஆகவே, நேற்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கும் சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, என தெரிவித்துள்ளார்.