விரைவில் திமுக ஆட்சியை தூக்கி எறிவார்கள்… சொத்துவரி, மின்கட்டண வரி உயர்வை கண்டித்து அதிமுக போராட்டம்!!
Author: Babu Lakshmanan25 July 2022, 1:49 pm
சொத்து வரிஉயர்வு , மின்கட்டணத்தை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி, குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜூலை 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பாளை ரோடு வி.வி.டி சிக்னல் அருகே முன்னாள் அமைச்சரும்,மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் கண்டன உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது :- தூத்துக்குடியில் தற்போது நடைபெற்று வரும் ரூ.1,500 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டம் உட்பட பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது அதிமுகதான். திமுக ஆட்சியில் மக்களுக்கான எந்த ஒரு நல்ல திட்டங்களும் கொண்டு வரவில்லை.
அதிமுக செயல்படுத்திய திட்டத்தை இன்று ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறார்கள். மக்களுக்கான பல நல்ல திட்டங்களை தந்தது அதிமுக ஆட்சிதான். ஆனால் இன்று திமுகவின் ஆட்சி விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு என தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது. இதனை விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள். மீண்டும் விரைவில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அதிமுகவின் நல்லாட்சி மலரும், என்றார்.
இந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் ,கழக அமைப்புச் செயலாளருமான சி.த செல்ல பாண்டியன், கழக அமைப்புச் செயலாளர் சின்னதுரை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்ளிட்ட அதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் மகளிரணியிணர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.