விரைவில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடக்க விழா.. சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan13 February 2024, 2:56 pm
விரைவில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடக்க விழா.. சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக நடைபெற்றது வருகிறது. இன்றைய நிகழ்வுகளில் தற்போது, சட்டப்பேரவையின் கேள்வி – பதில் நேரம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்றி மூலமாக நீர் நிரப்பும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.
ஆனால், தற்போது அந்த பணி சுணக்கமாக நடைபெற்று வருகிறது, இதை துரிதப்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அந்த துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
வேகமாக, துரிதமாக இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது, 60 ஆண்டுகள் கனவுகளாக இருக்கக்கூடிய அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை சுமார் 1,682 கோடி ரூபாயில் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு, 90% அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்டன.
மீதமுள்ள 10% பணிகள் திமுக பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முடித்து உள்ளீர்கள். இருந்தாலும், சோதனை ஓட்டம் என்ற முறையில் சில இடங்களில் ஏரிகளுக்கு, குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் விடுபட்ட இடங்களை சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, அத்திக்கடவு – அவிநாசி திட்டம் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. குழாய்கள் பதிக்கும் சில இடங்களில் இழப்பீடு தருவதில் பாக்கி இருப்பதால், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு விரைவில் தொடக்க விழா நடத்தப்படும் எனவும் பதிலளித்தார்.