சட்டவிரோத கல்குவாரி குறித்து புகார் கொடுத்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!!
Author: Udayachandran RadhaKrishnan24 July 2022, 7:07 pm
திண்டுக்கல் : நத்தத்தில் கல்குவாரி நடத்தும் நபர்களால் நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசங்கரன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்றுவட்டார பகுதிகளான சிறுகுடி, செந்துறை, தேத்தாம்பட்டி, பண்ணியா மலை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட ஊர்களில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து பல்வேறு மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஜல்லி, எம்சாண்ட், பிசாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இவற்றில் பல்வேறு கல்குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும் அனுமதி இல்லாத வெள்ளை கற்களை லாரிகளில் கடத்திச் செல்வதாகவும் கூறி நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவசங்கரன் தலைமையில் அக்கட்சியினர் பல்வேறு வாகனங்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி அனுமதியின்றி வெள்ளைக்கற்களை ஏற்றி சென்ற சிறுகுடி பகுதியை சேர்ந்த கல்குவாரிக்கு சொந்தமான வாகனத்தை நத்தம் காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்தார்.
இது தொடர்பாக கல் குவாரி நடத்துபவர்களுக்கும் சிவசங்கரனுக்கும் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில்
நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவசங்கரன்
அவர்களுக்கு சொந்தமான நத்தம் செந்துறை ரோட்டில் உள்ள வீட்டுக்கு வந்த பண்ணியாமலையில் கல்குவாரி நடத்தி வரும் இ. ஆர்.எஸ் சின்னையா மற்றும் ராஜா என்ற இரண்டு நபர்கள் சிவசங்கரன் வீட்டிற்கு சென்று கல்குவாரிகளின் தொடர்பாக போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கைகலப்பில் முடிந்துள்ளது.
தொடர்ந்து ராஜா என்பவர் சிவசங்கரனை கூர்மையான கம்பி போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முகம்,கை, கால்களில் காயமடைந்த சிவசங்கரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டார். இத்த தாக்குதல் தொடர்பாக ராஜா என்பவரை நத்தம் காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.