விவசாயம் செய்வதாக நிலம் வாங்கி குவாரி அமைக்க முயற்சி : திமுக பிரமுகர்கள் மீது பொதுமக்கள், விவசாயிகள் புகார்.. எதிர்ப்பை மீறி அரசு அதிகாரி அனுமதி!!
Author: Udayachandran RadhaKrishnan28 May 2022, 9:44 pm
கரூர் : விவசாயம் செய்வதாக நிலத்தினை வாங்கி விட்டு சட்டவிரோத கல்குவாரி மற்றும் எம்.சாண்ட் நிறுவனம் தயாரிப்பதற்கான வேலைகளை விவசாய நிலத்தில் அமைக்க முயலும் தனியார் கல்குவாரிக்கு எதிராக ஒன்று விவசாயிகள் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பெரியமஞ்சுவெளி கிராமத்திற்குட்பட்ட அழகம்பட்டி பகுதியில் சுமார் 70 க்கும் மேற்பட்ட குடும்பங்களும், அந்த ஊரினை ஒட்டியுள்ள செம்பாறைப்பட்டி பகுதியில் சுமார் 30 குடும்பங்களும் என்று அந்த இரண்டு ஊர்களை சுற்றியும் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 400 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இதில், அழகம்பட்டி ஒட்டியை பாதையில் அமைந்துள்ள செம்பாறைப்பட்டி பகுதியில் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், மேட்டுப்பட்டி பகுதியினை சார்ந்த நைமுதீன் முஹம்மது அப்துல் காதர் மற்றும் அவரது தந்தை முகமது ஷிஹாப் ஆகியோர் இந்த இடத்தினை வாங்கியுள்ளனர்.
திமுக பிரமுகர்களான இவர்கள் அங்குள்ள நிலத்தினை வாங்கி, அங்கு கிரஷர் மற்றும் எம்.சேண்ட் மண் அள்ளுவதற்காக குவாரி அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், இதனையறிந்த பெரியமஞ்சுவெளி கிராம பொதுமக்கள் அப்பகுதியில் குவாரி அமைந்தால் நிலத்தடி நீர் முற்றிலும் கிடைக்காது என்றும், விவசாயம் பாழ்பட்டு விடும், மேலும் அங்கு வசிக்கும் கிராம மக்களுக்கு சுவாசக்கோளாறு மற்றும் இரவு நேரங்களில் வெடி வைத்து கற்கள் ஏற்படும் நிலை வரும் போது பயங்கர சப்தங்களும் நிலவும் ஆகவே, குடியிருப்பு பகுதிக்குள் எப்படி கிரஷர் நிறுவனம் அமைக்க முடியும் என்று கூறி, கடந்த மே 1 ம் தேதி நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கிரஷர் நிறுவனம் நடத்த கூடாது என்று தீர்மானமும் போடப்பட்டு, அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டு, கிரஷர் நிறுவனம், கல்குவாரிகள் வரக்கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இதே பகுதியில் ¾ கி.மீட்டருக்குள்ளேயே கணவாய் என்னுமிட்த்தில் கல்குவாரிகள் உள்ள நிலையில், மேலும் ஒரு கல்குவாரியா ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தீர்மானமும் அரவக்குறிச்சி வட்டாரவளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் அனுப்ப பட்டுள்ளது.
இருப்பினும் அரவக்குறிச்சி வட்டாட்சியர், குவாரி அமையும் இடத்தினை ஆய்வு செய்யாமலேயே மேற்படி நிறுவனத்திற்கு தடையின்மை சான்று பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கொடுத்துள்ளார்.
தற்போது 50 மீட்டருக்குள்ளேயே குடியிருப்புகளும், கிணறு மற்றும் விவசாய நிலங்கள் ஆகிய உள்ள நிலையிலும், குவாரி அமைய உள்ள இடத்தினை சுற்றி குடகனாறு ஆற்றுப்பாசன வாய்க்காலும் அமைந்துள்ளது.
இந்நிலையில் எப்படி தடையின்மை சான்று கிடைத்துள்ளது என்றும் இடத்தினை வாங்கி திமுக கட்சியின் பெயரை பயன்படுத்தி தடையின்மை சான்று வாங்கியிருக்கும் நிலையில், அங்குள்ள விவசாயிகளும், பொதுமக்களும் அந்த தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இங்கு கல்குவாரி அமைந்தால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் 3 கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றதோடு, உடனே தமிழக முதல்வரும், கரூர் மாவட்ட நிர்வாகமும் மேல்நடவடிக்கை எடுத்து ஏழை விவசாயிகளையும், மக்களையும் காக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.