அதே நேரம் அதே இடம்.. அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி : அரசியல் பிரமுகர்களை குறி வைக்கும் காஞ்சிபுரம் கும்பல்!!
Author: Udayachandran RadhaKrishnan6 November 2023, 10:00 pm
அதே நேரம் அதே இடம்.. அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி : அரசியல் பிரமுகர்களை குறி வைக்கும் காஞ்சிபுரம் கும்பல்!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் வயது 35. தொழில் அதிபரான இவர் அதிமுக கட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளராக உள்ளார். இவர் மனைவி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

இந்நிலையில் நேற்று மோகன் ஸ்ரீபெரும்புதூர் – ஒரகடம் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் மோகன் வந்த காரை வழிமறித்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொலை செய்ய முயன்றனர். தன்னை தாக்க மர்ம நபர்கள் முயன்ற போது சுதாரித்து கொண்ட மோகன் அவர்களிடமிருந்து லாவகமாக தப்பி சென்றார்.
இது குறித்த தகவலின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தப்பி ஓடிய மர்ம நபர்களை குன்றத்தூர் சாலையில் மடக்கி பிடித்தனர். போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் தடுக்கி விழுந்து கை கால்களில் முறிவு ஏற்பட்டது என கூறப்படுகிறது .
பிடிபட்ட நபர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த குமரேசன் வயது 30, அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் வயது 28, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த அபிஷேக் வயது 20 என்பது தெரிய வந்தது.
ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் மூன்று பேரையும் கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கிளாய் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி நாகராஜ், பாஜகவை சேர்ந்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பிபிஜிடி.சங்கர் மற்றும் எச்சூரை சேர்ந்த திமுக பிரமுகர் ஆல்பர்ட் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து அதிமுக பிரமுகரும், தொழிலதிபருமான போந்தூர் மோகனை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.