பல கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ் நீரை விற்பனை செய்ய முயற்சி : வலை வீசிய வனத்துறை.. சிக்கிய 5 பேர்!
Author: Udayachandran RadhaKrishnan14 June 2024, 6:09 pm
திமிங்கல வாந்தி எனப்படும் ஆம்பர்கிரீஸ் சீனாவில் பாலியல் திரவ மருந்து தயாரிக்கவும், அரபு நாடுகளில் உயர்ரக வாசனை திரவியங்கள் தயாரிக்கவும், இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக ஆம்பர்கிரிஸ் ஒரு வாசனை திரவியமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதற்கு எப்பொழுதும் டிமாண்ட் அதிகம்.
ஆயினும் ஆம்பர்கிரீசை இந்தியாவில் வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவற்றை சிலர் கடத்தி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் திருச்சி மிளகு பாறையில் உள்ள ஒரு விடுதியில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் மதுரையை சேர்ந்த கார்த்திக், வடிவேலன், கோவில்பட்டியை சேர்ந்த சண்முகப்பிரியன், தென்காசியை சேர்ந்த குமார், கடையநல்லூரை சேர்ந்த ஜெயபால் ஞானசிங் ஆகியோர் திமிங்கல உமிழ்நீரை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்து தெரிய வந்தது. இதனையடுத்து ஆம்பர் கிரீசை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீர் 19.2 கிலோ என அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்ட பொழுது அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கில உமிழ் நீர் இன்று சந்தையில் மதிப்பு பல கோடி ரூபாய் வரும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்