கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகிறார் ஆட்டோ ஓட்டுநர்: குஷியில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்..!!

Author: Rajesh
3 March 2022, 4:01 pm

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மேயர் வேட்பாளராக ஆட்டோ ஓட்டுநர் அறிவிக்கப்பட்டள்ளது கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருப்பது திமுகவினரிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் எதிர்பாராத வகையில் மேயர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதில் ஆட்டோ ஓட்டுநரான க.சரவணன் என்பவரை மேயர் வேட்பாளராக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்திலேயே இரண்டு மாநகராட்சிகள் கொண்ட மாவட்டம் தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியில் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இதில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, திமுக 38 வார்டுகளில் வெற்றி பெற்றனர். சுயேட்சையும், அதிமுகவினரும் தலா மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சியில் முதல் மேயர் பதவியை பெற திமுகவினர் கடுமையாக முயற்சி செய்து வந்தனர். ஆனால் திமுக தலைமை இன்று கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் பதவியை கூட்டணி கட்சியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

கும்பகோணம் மாநகராட்சியில் 18வது வார்டில் தேர்வு செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநரான சரவணனை மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணன். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார்.
தற்போது நகர துணைத் தலைவராக உள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி தொழில் நடத்தி வருகிறார். இவர் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநரான சரவணன் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • goundamani is the only actor who called rajinikanth without respect ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?