கோவை வடக்கு மண்டல தலைவராக ஆட்டோ ஓட்டுனர் தேர்வு : தலைமை வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என நெகிழ்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan30 March 2022, 8:47 pm
கோவை : கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டல தலைவராக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வரும் கதிர்வேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மண்டல தலைவர் பதவி தொடர்பாக விண்ணப்பிக்காத நிலையில் தனக்கு தலைமை இன்ப அதிர்ச்சி கொடுத்து இருப்பதாக கதிர்வேல் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி 97 இடங்களில் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதில் திமுக சார்பில் 10 வது வார்டில் போட்டியிட்ட ஆட்டோ ஓட்டுனரான கதிர்வேலும் ஒருவர். கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட கதிர்வேலுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக வடக்கு மண்டல தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற மண்டல தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில் வடக்கு மண்டல தலைவராக ஆட்டோ ஓட்டுனர் கதிர்வேல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆட்டோ ஓட்டுனராக எளிய பின்னணியில் இருந்த தனக்கு கவுன்சிலர் வாய்ப்பு ஏற்படுத்தியதுடன், வடக்கு மண்டல தலைவராகவும் வாய்ப்பு கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் தெரிவித்தார்.
மண்டல தலைவர் பதவிக்கு கட்சி தலைமையிடம் விண்ணப்பிக்கவே இல்லை எனவும், வீட்டில் நேற்று தூங்கிக்கொண்டு இருந்த போது நண்பர்கள் கூறித்தான் எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது தெரியும் எனவும், கட்சி தலைமை இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கின்றது,
தலைமை என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் செயல்படுவேன் எனவும் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக தேர்வு செய்யப்பட்ட கதிர்வேல் தெரிவித்தார்.