20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2பேர் பலி… கோவையில் பயங்கரம் : மதுவால் நடந்த விபரீதம்!!!
Author: Udayachandran RadhaKrishnan25 October 2023, 8:27 am
20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2பேர் பலி… கோவையில் பயங்கரம் : மதுவால் நடந்த விபரீதம்!!!
கோவை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து ஆட்டோ விபத்து – இரண்டு பேர் பலி மூன்று பேர் படுகாயம்.
கோவை தடாகம் சாலை சோமையனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்(வயது 34). இவரது நண்பர்கள் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 45) கருப்பசாமி(வயது 51) அய்யனார்(வயது 45) சக்திவேல்(39).
இவர்கள் ஐந்து பேரும் தினேஷ்குமார் வீட்டில் இன்று மதியத்திற்கு மேல் இருந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் வெளியில் எங்காவது சென்று மது அருந்தலாம் என்று எண்ணி ஏழுமலையின் ஆட்டோவில் வீரபாண்டியை அடுத்த மருதங்கரை என்ற மலைவாழ் கிராமப் பகுதிக்கு சென்று மது அருந்திவிட்டு திரும்பி உள்ளனர்.
ஆட்டோவை ஏழுமலை ஓட்டி வந்த நிலையில் மூலக்காடு எனும் பகுதி அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை மற்றும் கருப்புசாமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். (ஏழுமலை ஆட்டோ ஓட்டுநர், கருப்பசாமி கேபிள் ஆப்பரேட்டர்)
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் மற்றும் போலீசார், பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம், ஆய்வாளர் தாமோதரன், ஆகியோர் ஊர் மக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்தவர்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தடாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.