தயாராகும் அவனியாபுரம் வாடிவாசல்… நாளை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!!
Author: Udayachandran RadhaKrishnan14 January 2024, 12:13 pm
தயாராகும் அவனியாபுரம் வாடிவாசல்… நாளை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!!
தமிழர்களின் பாரம்பரியமிக்க பண்பாட்டையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டும், பொங்கலை வரவேற்கும் விதமாகவும் நாளை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகிறது. நாளை (15-ந்தேதி) அவனியாபுரத்திலும், நாளை மறுநாள் (16-ந்தேதி) பாலமேட்டிலும், 17-ந்தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது.
இதில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஜல்லிக்கட்டு நடக்கும் இந்த 3 இடங்களிலும் கடந்த வாரம் முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்துள்ளது.
ஆன்லைன் மூலமாக முன்பதிவு நடைபெற்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
குறிப்பாக, அவனியாபுரத்தில் 2,400 காளைகள், 1,318 மாடுபிடி வீரர்கள், பாலமேட்டில் 3,677 காளைகள், 1,412 மாடுபிடி வீரர்கள், அலங்காநல்லூரில் 6,099 காளைகள், 1,784 மாடுபிடி வீரர்கள் என விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அங்கு ரூ.26½ லட்சம் செலவில் கேலரி, தடுப்பு கட்டைகள் கட்டும் பணி, வாடிவாசல் அமைக்கும் பணி, காளைகள் அழைத்து வரும் இடம், பார்வையாளர்கள் கேலரி மற்றும் கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடுகள் முடியும் நிலையில் உள்ளது.
இன்று மாலைக்குள் அவை நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முதல் நிகழ்வாக நாளை (திங்கட்கிழமை) பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பயிற்சி பெற்ற காளைகளும், மாடுபிடி வீரர்களும் களம் இறங்க தயார் நிலையில் இருக்கிறார்கள். காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது.