தொடர் விடுமுறையால் ஆழியாறு அணையில் நிரம்பி வழிந்த சுற்றுலா பயணிகள் : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!!
Author: Udayachandran RadhaKrishnan2 October 2022, 4:43 pm
இன்று முதல் 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை, ஆழியாறு பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திரண்டனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை, பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கவியறிவு உள்ளிட்ட இடங்களுக்கு கோவை ,ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
இந்நிலையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய விடுமுறை நாட்கள் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திரண்டதால் பூங்கா மற்றும் கவியரவி பகுதிகளில் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் நின்றனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதை அடுத்து போக்குவரத்து போலீசார் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழியார் பகுதியில் மக்கள் கூட்டம் படையெடுத்த வண்ணம் உள்ளதால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.