சுற்றுச்சுவரை இடித்து தள்ளி கல்லூரிக்குள் நுழைந்த பாகுபலி காட்டு யானை : மாணவர்கள் பீதி.. ஷாக் காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2023, 10:47 am
இரவு நேரத்தில் வனக் கல்லூரி சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தில் பாகுபலி யானை நுழைந்தால் பரபரப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரம்மாண்ட உருவம் கொண்ட பாகுபலி என்ற காட்டு யானை கடந்த இரண்டு ஆண்டுகளாக முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகிறது.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இரண்டு மாதங்களாக வனத்தை விட்டு வெளியேறாமல் இருந்த யானை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் பெற்று கடந்த ஒரு சில தினங்களாக அதனுடைய வழக்கமான பாதைகளில் நடமாடி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு கல்லூரி வளாகத்துக்குள் யானை நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கல்லூரியை கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்கு செல்வதற்காக யானை சுற்றுச்சுவரை உடைத்ததாக கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் கல்லூரி வளாகத்தில் யானையின் நடமாட்டம் இருப்பதால் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள்இரவு நேரங்களில் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கல்லூரி நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.