காது குத்துவதற்காக மயக்க மருந்து.. 6 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!
Author: Hariharasudhan4 February 2025, 1:46 pm
கர்நாடகாவில், காது குத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தியதால் 6 மாத குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டின் அடுத்த ஷெட்டிஹள்ளி என்ற கிராமத்தில் வசிப்பவர்கள் ஆனந்த் – சுபா தம்பதியர். இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், குழந்தைக்கு காது குத்தும்போது, வலி தெரியாமல் இருப்பதற்காக, பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்கு இருந்த மருத்துவர் நாகராஜு, குழந்தையின் இரண்டு காதுகளிலும், மயக்க மருந்து ஊசி போட்டுள்ளார்.
இதற்காக அவர் 200 ரூபாய் கட்டணமும் பெற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குழந்தைக்கு ஊசி போட்ட நிலையில், அனஸ்தீஷியா அதிக வீரியம் கொண்டதாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், குழந்தையின் வாயில் நுரை வந்துள்ளது. எனவே, உடனடியாக தாலுகா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை இரட்டைக் கொலை.. 4 வருடங்கள் கழித்து டெல்லியில் சிக்கிய டைல்ஸ் தொழிலாளி!
ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், பொம்மலாபுரா அரசு ஆரம்ப சுகாதார மையத்திலேயே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், இது தொடர்பாக ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுகாதாரத் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.