ரூ.2 லட்சத்திற்கு ஆண் குழந்தை விற்பனை.. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய மருத்துவர் ; மருத்துவமனைக்கு சீல்வைப்பு!
Author: Babu Lakshmanan22 December 2023, 9:29 pm
திண்டுக்கல்லில் 2 லட்சத்திற்கு ஆண் குழந்தையை விற்பனை செய்த மருத்துவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அருள் செல்வி. இவர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி பல ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
இதனிடையே, கடந்த 2020 ஆம் ஆண்டு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சாலையில் செயல்பட்டு வரும் பவானி கணேசன் மருத்துவமனையில் டாக்டர் பவானியை அணுகியுள்ளனர். அருள் செல்வியை பரிசோதித்த டாக்டர் பவானி கணேசன் கர்ப்பப்பை சுருங்கி உள்ளதால் குழந்தை பாக்கியம் கடினம் எனக் கூறியுள்ளார்.
இதனிடையே தன்னிடம் பிறந்த சில மாதங்கள் ஆன ஆண் குழந்தை உள்ளது என்றும் ரூ. 2 லட்சம் தந்தால் குழந்தையை விற்பனை செய்வதாக கூறியுள்ளார். சட்டப் பிரச்சனைகள் ஏற்படும் என பால்ராஜ் பயந்துள்ளார் ஆனால், பிரச்சனைகள் வந்தால் தான் பார்த்துக் கொள்வதாக டாக்டர் பவானி கணேசன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இரண்டு லட்சம் கொடுத்து ஆண் குழந்தையை பால்ராஜ் தம்பதியினர் வாங்கிச் சென்றனர். கடந்த 3 வருடங்களாக தங்களது பெற்ற குழந்தை போல் பால்ராஜ் தம்பதியினர் நல்ல முறையில் ஆரோக்கியத்துடன் குழந்தையை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பால்ராஜ் தம்பதியினர் சட்ட விதிகளுக்கு புறம்பாக ஆண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார் அனுமந்தராயன் கோட்டை சென்று கிடைத்த தகவல்படி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சம்பவம் நடைபெற்றது உண்மை என தெரியவந்தது. இதனை அடுத்து, பால்ராஜ் தம்பதியினரை திண்டுக்கல்லில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார். குழந்தையை ஒப்படைக்கும் படி கூறினார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சிவகுமார், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக கூறி மருத்துவர் பவானி கணேசன் மற்றும் பால்ராஜ், அருள் செல்வி மீது கடந்த12 ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே டாக்டர் பவானி கணேசன் மருத்துவமனை நடத்த அரசு அனுமதி பெறாமல் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சாலையில் பவானி கணேசன் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்தது. மேலும் ஆயுர்வேதா, சித்தா போன்ற மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ அதிகாரிகளால் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.