இடுகாட்டில் பால்வாடி கட்டிடமா..? அமைச்சருக்கு தெரிஞ்சுதான் இதெல்லாம் நடக்குதா..? திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு..!!
Author: Babu Lakshmanan1 November 2022, 1:57 pm
காஞ்சிபுரம் ; இறந்தவர்களின் சடலங்களை புதைக்கும் இடுகாட்டின் மீது அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஐயப்பன்தாங்கல் ஊராட்சி சென்னைக்கு மிக அருகாமையில் முதல்நிலை ஊராட்சியாக உள்ளது. இது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் 15 வார்டுகளும், சுமார் 140 தெருக்களும், 27 ஆயிரம் வாக்காளர்களும், சுமார் 75000 ஆயிரம் மக்களும் உள்ளனர்.
மாவட்டத்திலேயே மிக அதிக வருமானம் ஈட்டக்கூடிய முதல் நிலை ஊராட்சியாக ஐயப்பன் தாங்கல் விளங்குகின்றது. இங்கு மிகப் பிரபலமான ராமசந்திர மருத்துவமனை, MMS மருத்துவமனை, மகேந்திரா கார் ஷோரூம், ஹூண்டாய் கார் நிறுவனம், ஃபிரிஸ்டிஜ், பிரின்ஸி, துளிப், தக்ஸின் போன்ற உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகளும், அசோகா ரெசிடென்சி, V7 என்ற நட்சத்திர ஹோட்டல், பிரபலமான தொழிற்சாலைகள் ஆகியவை உள்ளன.
தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களின் சொந்தத் தொகுதியான ஐயப்பன் தாங்கல் ஊராட்சியில், சொல்ல முடியாத அளவுக்கு உள்ள பிரச்சனைகளால் மக்கள் சொல்லொன்னா துயரத்தில் அவதிப்பட்டு வருகின்றார்கள்.
இது மட்டுமல்லாமல் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ஜமீலா மக்கள் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதில்லை, அவருடைய கணவர் பாண்டுரங்கனும், மகன் அஸ்வினும் தான் ஊராட்சியில் முழுஅதிகாரம் செலுத்துகின்றார்கள். அவர்களின் அணுகுமுறையால் தான் அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே இந்த அளவுக்கு அவலங்கள் ஏற்பட்டுள்ளது என மக்கள் பொரிந்து தள்ளூகிறார்கள்.
குறிப்பாக நாலாவது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியன் நகர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு சடலங்கள் புதைக்கப்படும் இடுகாட்டில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி வருகின்றார்கள். கட்டடத்துக்கு நான்கடி தூரத்திலேயே இரண்டு சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி அப்பகுதியில் வசிக்கும் திலீப் குமார் என்பவர் கூறும் போது, சுடுகாடு இந்தப் பகுதியில் உள்ளதால், நாங்களே இந்த வழியாக செல்ல ரொம்பவும் அச்சப்படுவோம். மாலை ஆறு மணி ஆகிவிட்டாலே இங்கே எந்த நடமாட்டமும் இருக்காது. அந்த அளவுக்கு நிசப்தமாக இருக்கும். அப்படிப்பட்ட பகுதியில் குழந்தைகள் படிக்கும் பால்வாடி பள்ளிக்கூடம் கட்டுவது மிகவும் கண்டிக்க கூடிய விஷயமாகும், என வேதனையுடன் தெரிவித்தார்.
முருகதாஸ் என்பவர் கூறும் போது, சுடுகாட்டில் குழந்தைகள் படிக்கும் பள்ளியை கட்டுவது முறையான செயலா? இதைக் கூட கவனிக்காமல் எப்படி ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் உள்ளனர். தொடக்க கல்வி கற்க வரும் குழந்தைகள் கதி என்ன? இந்த தொகுதி அமைச்சர் தாமோ அன்பரசனுக்கு இது தெரியாதா? இங்கு அங்கன்வாடி கட்டினால் ஒரு குழந்தைகள் கூட மையத்திற்க்கு வரமாட்டார்கள் என கொந்தளிப்புடன் கூறுகின்றனர்.
அதேபோல் நான்காவது வார்டு பொன்னியம்மன் கோவில் தெருவில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாடு ஆகிய இரண்டையும் இடித்து தள்ளிவிட்டு, அதன் மீது சுமார் 15,000 டன் குப்பைகளை கொட்டியுள்ளார்கள். இந்தப் பகுதியில் ஏராளமான உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகளும் சுமார் 4000க்கும் மேற்பட்ட நடுத்தர மக்களும் வசித்து வருகின்றார்கள்.
நாளொன்றுக்கு ஆயிரம் டன் குப்பைகள் இங்கு வந்து கொட்டப்படுகின்றது. வெறும் 20 முதல் 25 டன் குப்பைகள் மட்டுமே இங்கு இருந்து அகற்றி ஒரகடம் பகுதிக்கு எடுத்து செல்லப்படுகின்றது. இந்த குப்பைகளால் இந்த பகுதி முழுவதும் சுகாதார கேடு ஏற்பட்டு பலருக்கு மர்ம காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.