தரமற்ற தார் ரோடு… 10 நாள் கூட பேட்ச் ஒர்க் தாங்க மாட்டிங்குது : மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் எச்சரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan21 செப்டம்பர் 2023, 9:52 காலை
தரமற்ற தார் ரோடு… 10 நாள் கூட பேட்ச் ஒர்க் தாங்க மாட்டிங்குது : மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் எச்சரிக்கை!
கோவை மாநகராட்சி பகுதியில், பல்வேறு திட்டங்களில் கீழ் புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவற்றின் தரத்தை, மாநகராட்சி கமிஷ்னர் பிரதாப், மேயர் கல்பனா ஆகியோர் தனித்தனியாக ஆய்வு செய்து, பொறியியல் பிரிவினருக்கு அறிவுரை வழங்குகின்றனர்.
சாலை போடுவதற்காக மட்டும், 260 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யப்படும் பணிகள், பல இடங்களில் தரமற்று இருப்பதாக புகார் எழுந்ததால், மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க செயலாளர் சந்திரபிரகாஷ் கூறியிருப்பதாவது : கோவை மாநகராட்சியில் இப்போது நடைபெறும் தார் ரோடு போடும் பணி மீதும் புகார்கள் வந்திருக்கின்றன. வெட்மிக்ஸில் ‘சில்ட்’ அதிகமாக வருவதாக சொல்கிறார்கள்.
மலிவு விலைக்கு கிடைப்பதற்காக, ‘சில்ட்’ அதிகமாக சேர்க்கப்பட்ட ‘வெட்மிக்ஸ்’ பயன்படுத்தாதீர்கள். ஐந்தாண்டுகள் உழைக்க வேண்டிய ரோடு, ஒரு ஆண்டிலேயே பள்ளமாகி விடும்.
BM&STCயில் நிர்ணயிக்கப்பட்ட அளவு தார் சேர்க்க வேண்டும்; 50 சதவீதம் கூட தரமாக நடப்பதாக தெரியவில்லை. உயரதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, ‘பேமன்ட்’ நின்று விடும். தற்போது நடைபெறும் டெண்டரில் இதுபோன்று நடப்பதாக பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.
சிலர் செய்யும் தவறால், துறைக்கும், அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள், தரக்குறைவாக வேலை செய்ய மாட்டோம் என உறுதியேற்க வேண்டும்.
‘பேட்ச் ஒர்க்’ ஒரு வாரம், 10 நாட்கள் கூட தாங்குவதில்லை என புகார் வருகிறது. அதை பார்க்கும்போது, கூனி குறுக வேண்டியிருக்கிறது. ரோடு ஒப்பந்ததாரர்கள், ‘குவாலிட்டி’யாக வேலை செய்ய வேண்டும். தயவு செய்து ஒப்பந்ததாரர்கள் 95% தரத்தை மேம்படுத்த வேண்டும். நமக்கே தெரியாமல் 5% தவறுகள் நடக்கும். அதை ஒண்ணும் செய்ய முடியாது.
தரமாக பணியாற்ற வேண்டும். பில் இல்லை, சாலை காணாமல் போய்விட்டது போன்ற வடிவேலு வசனத்தை சொன்னால் சங்கம் உங்களுக்கு உறுதுணையாக நிற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநகராட்சியில் இருந்தும், நிறைய புகார்கள் வருகின்றன. ஏற்கனவே செய்த பணிகளை சரி செய்ய வேண்டும்; இனி செய்யும் பணிகளை, தரமாக செய்ய வேண்டும்.
தரத்தை அதிகப்படுத்தணும், வேறு எந்த மாதிரி நுணுக்கங்களை கையாள வேண்டும் என எண்ணினால் சங்கத்திடம் கேளுங்கள், எனக்கு தனியாக தொடர்பு கொண்டு சந்தேகம் இருந்தால் கேளுங்கள். ஏராளமான புகார் வந்துள்ளதால் இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாமல் தங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு என்று கருதி பணிகளை துரிதமாக செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
0
0