வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan23 ஜூலை 2023, 10:41 காலை
கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் டிசைன் இன்ஜினியரான ராஜேஷ். இவர் தனது மனைவி சுருதி, 10 வயது மகள் யக்சிதா ,தாய் பிரேமா ஆகியோருடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடியேறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று காலை அவரது மாமனாரான பாலன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவதாக பேசியுள்ளார்.தொடர்ந்து அவரது மாமனார் பாலன் அன்று இரவு ராஜேஷுக்கும் மகள் சுருதிக்கும் செல்போனில் தொடர்பு கொண்ட போது இருவரும் பதில் அளிக்காமல் இருந்துள்ளனர்.
மேலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமையும் அவர் செல்போனில் அழைத்தும் பதில் இல்லாததால் வீட்டின் உரிமையாளரான ஷீலா என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். இதை அடுத்து இன்று மாலை ஷீலா, ராஜேஷின் வீட்டின் கதவை தட்டிய பொழுது அங்கிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்துள்ளார்.
இதனால் பாலனுக்கு தகவல் அளித்த ஷீலா வடவள்ளி காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் உள்புறமாக தாழிட்ட கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கியபடி ராஜேஷ் கிடந்துள்ளார்.
மேலும் அங்கிருந்த கட்டிலில் மனைவி சுருதி, தாய் பிரேமா மற்றும் மகள் யக்சிதா ஆகியோரும் உடல் அழுகி நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். தொடர்ந்து நான்கு பேரின் சடலங்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேஷ் பல இடங்களில் கடன் பெற்று தற்போது கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததும் கடந்த வியாழக்கிழமை இரவு டோமினோஸ் உணவகத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து இரவு உணவு வாங்கியதும் தெரியவந்துள்ளது.
வியாழக்கிழமை இரவு டோமினோஸ் நிறுவன ஊழியர் இரவு உணவை வழங்கிய போது கடைசியாக ராஜேஷ் பார்த்ததாகவும் அதற்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே ராஜேஷ் தற்கொலைக்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்தும் அவருக்கு கடன் வழங்கி தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயல்பட்டது யார் என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0